சேலம் மாவட்டம் வடசென்னிமலை முருகன் கோவிலில் முருகனை குழந்தை வடிவம், துறவற கோலம், குடும்ப நிலை என மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் குடும்பமாகவும் காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களில் காட்சி தருவது அபூர்வம். இம்மூன்று கோலங்களும் வாழ்க்கையின் பெரும் உண்மைகளையும் விவரிக்கிறது. மனிதன் குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சியின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கிறான். அவனே இல்லற வாழ்க்கை எனும் பந்தத்தில் இருக்கும் போது மகிழ்ச்சியும் துன்பமும் கலந்த கடமையில் உழல்கிறான். எதன் மீதும் பற்றில்லாத துறவற நிலையை அடையும்போது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைக்கிறான். எதன் மீதும் அதிக பற்று வைக்கவேண்டாம் என இத்தலத்து முருகன் உணர்த்துகிறார்.