பதிவு செய்த நாள்
25
பிப்
2016
10:02
பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,5 முதல் பிப்., 25 வரை நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மாரியம்மன் பாதிரிப்பிள்ளையார் கோயிலில் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடந்தது. மாலை 4.25 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமானது.
தேரின்மீது பக்தர்கள் பழங்களையும், நவதானியங்களையும் வீசினர். நான்குரத வீதிகளில் தேர் வலம் வந்து மாலை 5.40மணிக்கு நிலையை வந்தடைந்தது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, நகர முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தலும், வையாபுரி குளத்து அருகே வாணவேடிக்கையும், அதிகாலை 3 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடந்தன. இன்று மாலை 5 மணிக்கு மாரியம்மன் நீராடல், இரவு 8 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் அம்மன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடைபெறும். இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் மாசித்திருவிழா முடிவடைகிறது. கேரள பக்தர்கள் நேர்த்திக்கடன்பல ஆண்டுகளுக்கு முன் பழநியில் வாழ்ந்த இந்து யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அவர்களில் பெரும்பாலானோர் கேரளமாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வசிக்கின்றனர். இவ்வாண்டு இந்துயாதவ சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வையாபுரிகுளம் அருகேயுள்ள படிப்பாறை காளியம்மன் கோயில் வந்தனர்.அங்கிருந்து அக்னி சட்டி எடுத்து மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அவதிதேரோட்டத்தை முன்னிட்டு நேற்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தேரோட்ட வீதியில் குப்பையை அள்ளாமல் துர்நாற்றம் வீசியது. மேலும் கிழக்குரத வீதியின் இருபுறத்திலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளால் அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.