பதிவு செய்த நாள்
29
பிப்
2016 
11:02
 
 திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர் ஸ்ரீவீரராக வப் பெருமாள் கோவிலில் உள்ள, லட்சுமி ஹயக்கிரீவர் சன்னதியில், நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்கிரீவர், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இங்கு, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, ஞாயிறு தோறும் ஐந்து வாரங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இரண்டாவது வாரமாக, நேற்று விசேஷ பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு யாகம் மற்றும் சுவாமிக்கு பழங்கள், திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, நாம சங்கீர்த்தனம், சாத்துமறை, மகா தீபாராதனை நடைபெற்றது. நினைவாற்றல், தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வு எழுத வேண்டும்; நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என, பிரார்த்தனை செய்யப்பட்டது; ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு, சுவாமி பிரசாதம் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்டவை அடங்கிய பாக்ஸ் வழங்கப்பட்டது. மார்ச், 6, 13 மற்றும், 17ம் தேதிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெறும்.