பதிவு செய்த நாள்
29
பிப்
2016 
11:02
 
 கோவை: மஹா சிவராத்திரி விழாவுக்காக பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தென் திருக்கைலாயம்’ என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.  கடல் மட்டத்திலிருந்து, 6,000 அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு, 5.5 கி.மீ., மலைப்பாதையில் செல்ல வேண்டும்.  ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில், ஏழு மலையை கடந்து சென்று அங்கிருக்கும் சுயம்புலிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். வரும் 7ம் தேதி மகாசிவராத்திரி விழா நடக்கிறது.
இம்மலையில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாதங்கள் மட்டும் காலநிலை சீராக இருக்கும். மற்ற காலங்களில் கடுங்குளிர் நிலவும். எனவே இம்மூன்று மாதங்களில் மட்டுமே ஏழாவது மலையில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த ஜூன் 1 முதல் இம்மலை மீது செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்திருந்தது. அந்த தடையை மீறி ஒரு சில பக்தர்கள் மலை மீது செல்வதால், வனவிலங்குகளிடம் சிக்கி விடுகின்றனர்.  இந்நிலையில் நேற்று முதல் பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போளுவாம்பட்டி ரேஞ்சர் தினேஷ்குமார் கூறுகையில், வெள்ளியங்கிரி மலையில் யானை, சிறுத்தை, புலி, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. நான்காவது மலையில், சமவெளி பகுதி அதிகமாக இருப்பதால், அங்கு வன விலங்குகள் இருக்க வாய்ப்புண்டு. இதன் வழியாகதான் ஏழாவது மலைக்கு செல்ல வேண்டும். இச்சூழ்நிலையில் பக்தர்கள் அவ்வழியாக செல்லும்போது கவனமுடன் இருப்பது அவசியம். பாதுகாப்புக்கு குளிரை தாங்கும் உடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். மலைக்கு செல்லும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். அசம்பாவிதங்களை தவிர்க்க வனத்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.