மாரியம்மன் கோவில் திருவிழா பறவைக்காவடி எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2016 11:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர். இக்கோவில் தேர்த் திருவிழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. இதனையடுத்து, பெண்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த 23ம் தேதி முதல் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய பூவோடு ஏந்தி வழிபாடு செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம், மார்க்கெட் ரோடு பகுதியிலிருந்து பக்தர்கள் நான்கு அடி நீளமுள்ள பறவைக்காவடி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, பறவைக்காவடி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர்.