பதிவு செய்த நாள்
29
பிப்
2016
04:02
வள்ளலார் என போற்றப்படும்
சிதம்பரம் இராமலிங்க அடிகள் அற்புதங்கள் பல நிகழ்த்தியவர். ஆனால் எளிமையே
வடிவானவர். பெருங்கருணை கொண்டவர். 1823, அக்டோபர் 5-ல் மருதூர் இராமையா
பிள்ளை - சின்னம்மை தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தவர் வாடிய பயிரைக்
கண்ட போதெல்லாம் வாடினேன் என ஓரறிவு உயிர்களுக்கும் இரங்கிய உள்ளம்
அவருடையது. ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, பெற்றோர்கள் சிதம்பரம்
நடராஜரை தரிசிக்கச் செல்ல, தீட்சிதர்கள் திரைவிலக்கிக் காட்டிய ரகசியம்
மற்றவர்களுக்குப் புரிந்ததோ இல்லையோ - குழந்தையான ராமலிங்கத்துக்குப்
புரிந்துபோனது. அதன் வெளிப்பாடுதான் உத்தரஞான சிதம்பரம் என்று
சொல்லப்படும். வடலூர் சத்தியஞான சபையில், தனது 49 வயதில் ஏழு திரைகளை
விலக்கி ஒளியையே இறையாய்க் காட்டிய தத்துவம்.
வள்ளலாரின்
அற்புதங்கள் அவர்களது மெய்யன்பர்களால் பலப்பலவாக சொல்லப்படுகின்றன.
வள்ளலார் எழுதிய திருவருட்பா பாடல்கள் ஆறு திருமுறைகளாக
தொகுக்கப்பட்டுள்ளன. எனினும் அன்று அவற்றை ஏற்றுக்கொள்ளாமல்
முரண்படுகிறவர்களும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த
தமிழறிஞரும் புலவருமான ஆறுமுக நாவலர் அவரது சமயக் கொள்கைகளுக்கு வள்ளலாரின்
கொள்கை மாறுபட்ட காரணத்தால், வள்ளலாரின் பாடல்கள் அருட்பா அல்ல; மருட்பா
என மறுப்புத் தெரிவித்ததோடு, அவற்றை அருட்பா என அழைக்கக்கூடாதென கடலூர்
நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிந்து
இறுதித் தீர்ப்பு வழங்கும் நாளும் வந்தது. நீதிமன்றத்தில் கூட்டம்
நிரம்பிவழிந்தது. நீதிமன்ற ஊழியர், ராமலிங்கப் பரதேசி ராமலிங்கப் பரதேசி,
ராமலிங்கப் பரதேசி என மூன்று முறை அழைத்தார். வெண் துணியால் தலைவரை
போர்த்தி அடிகளார் உள்ளே நுழைந்தார். நீதிமன்ற அவையில் அமர்ந்திருந்த
அனைவரும் அவரைக் கண்டதும் தங்களையறியாமல் எழுந்து நின்றனர். வழக்குத்
தொடுத்த நாவலரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.
பின்
நீதிபதி நாவலரிடம், வழக்கு தொடுத்த நீங்களே உங்களது எதிர் தரப்பாளரைக்
கண்டு எழுந்துநின்று மரியாதை செய்தது ஏன்?” என்று கேட்க, நாவலர் ஒரு கணம்
தடுமாறி, “அவர் ஒரு மகான் என்றார். நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து,
வள்ளலாரின் பாடல்களை அருட்பா என் அழைக்கத் தடையில்லையென உத்தரவிட்டார்.
வள்ளலாரைக் கண்டு நாவலர் எழுந்துநின்றது மட்டும் அற்புதமல்ல; வழக்குக்காக
நீதிமன்றத்தில் வள்ளலார் இருந்த அதேசமயம் வடலூர் ஞான சபையிலும் உரையாற்றிக்
கொண்டிருந்தார் வள்ளலாரின் இல்லப் பராமரிப்புப் பொறுப்பாளரான பரசுராமனும்,
அடிகளாரின் மெய்யன்பாளரான கண்ணப்பனும் ‘ஒரே சமயத்தில் இரு இடங்களில்
காட்சிதரும் அற்புதத்தை வேறு இடங்களிலும் அவர் நிகழ்த்தியுள்ளார்
என்கின்றனர். திருவருட்பாவின் ஆறு திருமுறைகளில் ஐந்தை- அவர் வெங்கட
ரெட்டியார் - முத்தலாம்மன் தம்பதியர் வேண்டுகோளுக்கிணங்கி கருங்குழியில்
தங்கியிருந்தபோது தான் எழுதினார். 1858 முதல் 1867 வரையிலான ஒன்பது ஆண்டு
காலத்தில் அவர் இப்பாடல்களை இயற்றினார்.
மின் வசதியற்ற அக்காலத்தில்
எண்ணெயில் எரியும் அகல் விளக்குகளே பிரதானம் வள்ளலாரின் இல்லத்துக்குத்
தேவையான எண்ணெயை வெங்கட ரெட்டியாரின் மனைவி முத்தாலம்மை அவ்வப்போது ஒரு
கலயத்தில் கொண்டுவந்து கொடுப்பது வழக்கம். ஒருநாள் ரெட்டியாரும்
முத்தலாம்மையும் வெளியூர் பயணம் புறப்பட்டார்கள். அவ்வாறு
செல்லும்போதெல்லாம் இரவு நேரங்களில் வள்ளலாரின் பயன்பாட்டுக்காக ஒரு
கலயத்தில் நீரும், ஒரு கலயத்தில் எண்ணெய்யும் கொடுத்துவிட்டுப் போவது
வழக்கம். அம்முறை அவசரப் பயணமாகக் கிளம்பிய முத்தாலம்மை எண்ணெய் என
நினைத்து ஒரு கலயம் நீரை வைத்துச் சென்று விட்டார். மறுநாள் பயணம் முடிந்து
வீடுதிரும்பிய முத்தாலம்மை, வீட்டில் எண்ணெய்க் கலயம் இருப்பதைக் கண்டு
திடுக்கிட்டார். அவசரத்தில் பெருமானுக்கு தண்ணீர்க்கலயத்தைக்
கொடுத்துவிட்டோமே. இரவெல்லாம் வெளிச்சத்துக்கு என்ன செய்தாரோ என பதறி
ஓடிவந்தார். நேரே வள்ளலாரிடம் சென்று தன் தவறை ஒப்புக்கொள்ள, அவர் சாந்தமான
முகத்துடன் “அம்மா! நீங்கள் கொடுத்த கலயத்தில் இருந்ததை ஊற்றித்தான்
இரவெல்லாம் விளக்கெரிந்தது. இப்போதும் எரிகிறது ” என்று காட்ட,
முத்தாலம்மன் மட்டுமின்றி அங்கிருந்த அனைவருமே ஆச்சரியத்தால் மெய்
சிலிர்த்துப் போயுள்ளனர். இவ்வாறாக, வள்ளலார் நீரில் விளக்கெரித்த
அற்புதத்தை உலகம் அறிந்தது.
வள்ளலார் கருங்குழியில் வசித்தபோது தன்
இருப்பிடம் அருகேயிருந்த இரண்டடி உயர விநாயகரை வழிபட்டு வந்துள்ளார்.
அவரைப் பற்றி தனது சித்தி விநாயகர் பதிகத்தில் 36 பாடல்களும்
புனைந்துள்ளார். இன்றும் வள்ளலார் வழிபட்ட கருங்குழி விநாயகருக்கு இருவேளை
பூஜை செய்யப்படுகிறது. வள்ளலாரின் நினைவாகவும் அவரது ஜீவகாருண்யத்தைப்
போற்றும் விதமாகவும் இவ்வூர் மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இங்கு
விநாயகர் சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடுகளும் ஊர்வலமும் நடைபெறுகிறது.
வள்ளலார் வணங்கிய விநாயகரையும் வள்ளலார் இல்லத்தில் அவரால் ஏற்றப்பட்ட
அணையா விளக்கையும் தரிசிக்க நினைப்பவர்கள் கருங்குழி சென்றுவரலாம். சென்னை -
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது வடலூர். இங்கிருந்து மூன்று
கிலோமீட்டர் தென்மேற்கில் கருங்குழி உள்ளது. பஸ், ஆட்டோ வசதிகள் உண்டு.