ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை பற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார். சிறப்புமிக்க இவ்வூரிலுள்ள மங்களநாதர் கோவிலில் உள்ள மரகத நடராஜர் எப்போதும் சந்தனக்காப்பு சாத்தப்பட்ட நிலையில் காட்சி தருகிறார். மரகத சிலைக்கு ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு சந்தனம் பூசப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல, மரகதக்கல் சிலைக்கு ஒலி, ஒளியால் பாதிப்பு ஏற்படாது. மதுரை மீனாட்சி அம்மன், தாய்லாந்திலுள்ள புத்தர் சிலை ஆகியவையும் மரகதத்தால் செய்யப்பட்டது தான். இந்தக் கோவில்களிலும் எப்போதும் ஒலி, ஒளி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்தச்சிலைகளுக்கு எந்த சேதமும் வந்ததில்லை. கி.பி.1330க்கு பிறகு விஜயநகர சாம்ராஜ்ய பிரதிநிதியான குமார கம்பன்னா என்பவர், சுல்தான்கள் வசம் இருந்த மதுரையைக் கைப்பற்றினார்.
மீனாட்சி அம்மன் கோவிலைத் திறந்து போது சன்னிதிக்குள் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இந்த ஒளியால் நீண்ட நாளாக அடைக்கப்பட்டிருந்த சன்னிதிக்குள் இருந்த மரகத மீனாட்சி சிலைக்கு எவ்வித சேதமும் வரவில்லை என்று சொல்லப்படுவதில் இருந்தே இது புரியும். பல நுõற்றாண்டுகளுக்கு முன்பு அந்நியர் படையெடுப்பின்போது, பல கோவில்களிலுள்ள சிலைகளையும், விலையுயர்ந்த ஆபரணங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். அந்நேரத்தில் சிதம்பரம், ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களின் உற்சவமூர்த்திகளை உள்ளூர் பக்தர்கள் காட்டில் ஒளித்து வைத்தனர். பாண்டிய நாட்டு கோவில்களில் அவர்கள் கொள்ளையடிக்க வந்தபோது, இங்கிருந்த மரகத நடராஜர் சிலையை பக்தர்களால் மறைத்து வைக்க முடியாமல் போயிற்று. காரணம், எட்டு அடி உயரமுள்ள இச்சிலையின் எடை அதிகமாக இருந்ததால் அதை துõக்க முடியவில்லை. எனவே சிலைக்கு சந்தனம் பூசி சாதாரண சிலை போல் மாற்றிவிட்டனர். அந்நியர்களும் அதை கல்சிலை என நினைத்து ஏமாந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்பு பக்தர்கள் மீண்டும் சந்தனத்தை களைந்து விட்டனர். இந்த வழக்கமே காலப்போக்கில் நிரந்தரமாக நிலைத்துவிட்டது.