பதிவு செய்த நாள்
03
மார்
2016
05:03
இளமை ததும்பும் யௌவனக் கோலத்தில், ச்யாமள வர்ணத்துடன் மங்கள ஸ்வரூபிணியாக த்வரிதா தேவி காட்சியளிக்கிறாள். இலைகளை உடுத்தி, மகா பராக்ரமம் கொண்ட அஷ்ட நாகங்களையும் வகைக்கு இரண்டு வீதம் நால்வகை ஆபரணமாக பூண்டிருக்கிறாள். அவற்றுடன் தாடங்கம், ஒட்யாணம், சிலம்பு அணிந்திருக்கிறாள். தலையில் ஒளிரும் வைரக் கிரீடமோ மயிலிறகால் ஆனது. கைகளில் கங்கணங்களும் அப்படியே ! இவளது தலைக்கு மேல் விளங்கும் குடையும், உடன் விளங்கும் கொடியும் கூட மயிலிறகால் ஆனவையே! சிவப்பு குந்துமணியால் ஆன மாலையை மார்பில் அணிந்து, மார்பில் குங்குமப்பூச்சுடன் விளங்குகிறாள்.
முக்கண்களும் மந்தகாசப் புன்னகை தவழும் திருமுகமும், பாசம், அங்குசம், வரதம், அபயம் என நான்கு திருக்கரங்களுடனும் சக்தி கணங்கள் சூழ, அழகிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திவரிதம் என்றால், உடனுக்குடன் என்றே பொருள். இவளுக்கு, தோதலா என்றும் ஒரு பெயர் உண்டு. தியாத்வைவம் தோதலாம் தேவீம் பூஜயேச் சக்திபிர்வ்ருதாம் எனும் வாக்கின்படி, தன்னைப் பணியும் பக்தனுக்கு சிறிதும் தாமதிக்காமல் அருள் புரிவதாலேயே தோதலா என்று பெயர் கொண்டவள். விஷ நோய்களைத் தீர்ப்பதில் திவரிதா சமர்த்தை. உலகின் அத்தனை விஷங்களும் நாகங்களுக்குக் கட்டுப்பட்டவை. அந்த நாகங்களே திவரிதா தேவிக்குக் கட்டுப்பட்டவை.
நாகராஜாக்களான அஷ்ட நாகங்களையும்- அதாவது, அனந்தன், குளிகன்- காது தோடுகள்; வாசுகி, சங்கபாலன்- தோள்வளைகள்; தட்சகன், மகாபத்மன்- ஒட்யாணங்கள்; பத்மனும் கார்க்கோடகனும் கொலுசுகள் என தன் ஆபரணங்களாக அணிந்திருக்கிறாள். எனவே இவள் முன் விஷபாதை நெருங்க முடியுமா? உண்ணும் உணவிலோ, சுவாசிக்கும் காற்றிலோ, உடலில் ஓடும் ரத்தத்திலோ, ஏன் மனத்திலோ- எப்பேர்ப்பட்ட விஷம் கலந்து அதனால் பாதிப்புகள் உண்டானாலும், திவரிதாவை முறையாக வணங்கினால், அந்த விஷத்தின் தீமையினை கணப்பொழுதில் போக்கி அருளுவாள். கல்வி வேறு, அறிவு வேறு அல்லவா? எத்தனையோ விஷயங்கள் படிக்கலாம். ஆனால், படித்த கல்வி மனதில் நிலைத்து நின்றால் மட்டுமே அதனால் பயன் உண்டு. அந்த அறிவை பிரகாசிக்கச் செய்பவள் திவரிதா. இவளை வணங்குபவர்கள் கல்வியில் தலைசிறந்தவர்களாக மாறிவிடுவர்.
கல்வியும் செல்வமும் ஒன்றாகச் சேருமா? சேரும் திவரிதாவை வணங்குவதால், திருமகளும் கலைமகளும் ஒன்றாக அருள்மழை பொழிவர். இவை மட்டும் போதுமா? அதை முறையாகப் பயன்படுத்த உடலில் ஆரோக்கியம் வேண்டாமா? ஆயுள் வேண்டாமா? அதையும் திவரிதா தேவி அருள்கிறாள்! திவரிதாவை உபாசனை செய்பவனுக்கு தேஜஸ்ஸும் தேக காந்தியும் கூடும் என்பது மந்த்ரசாஸ்த்ரம் கூறும் உண்மை. தெய்வீக அழகு அவனிடத்தில் பொலியும். திவரிதா தேவியை வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் வழிபடுவது விசேஷம். அமாவாசை முதல் பவுர்ணமி வரையிலான சந்த்ர கலைகளில் பிரதமை முதல் சப்தமி வரை முன் ஏழு; நவமி முதல் பவுர்ணமி வரை பின் ஏழு. இந்த 15 கலைகளில் நடுவாக நிற்பது அஷ்டமி. நன்றாகக் கவனித்தோமானால், பிரதமை முதல் சப்தமி வரை அரை நிலவுதான்! அஷ்டமியிலிருந்தே பூரண வளர்ச்சி புலப்படும். அதனால்தான் அஷ்டமியன்று தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த அஷ்டமி திதிக்கு உரியவள் திவரிதா.
இவளை வணங்குவதால் எப்பேர்ப்பட்ட பயத்தையும் போக்கி நல்வாழ்வு வாழலாம். துல்ஜாபூர் பவானியாக, சத்ரபதி சிவாஜிக்கு அருள் செய்ததும் இந்த திவரிதா தேவியே என்பது பலரும் அறியாத உண்மை!