சதிதேவியின் உடல்பாகங்கள் பூமியில் விழுந்த இடங்களை சக்தி பீடங்களாக வணங்கி வருகிறோம். அவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது ரூர்கி தலத்திலுள்ள அம்மன் கோயில். சதிதேவியின் ஆபரணமான சூடாமணி இங்கு விழுந்ததாகவும், அதுவே சுயம்பு வடிவாய் மகிழ்ந்ததாகவும் கூறுகிறார்கள். இக்கோயில் லந்தோரா சாம்ராஜ்ய மன்னரால் கி.பி. 1805-ல் கட்டப்பட்டது. அந்த அரசர் வேட்டையாட காட்டுக்குச் சென்ற போது இந்த சுயம்பு அன்னையைக் கண்டிருக்கிறார். பிள்ளைப் பேறில்லாமல் வருந்திக் கொண்டிருந்த அவர் இந்த அன்னையிடம் தன் குறையை முறையிட்டுவிட்டு வந்தார். அடுத்த ஆண்டே ஆண் வாரிசு கிடைக்க, நன்றிக் காணிக்கையாக இக்கோயிலைக் கட்டினார்.
பல்வேறு வேண்டுதல்கள் பொருட்டு பக்தர்கள் இங்கு வந்து வணங்கினாலும், மழலைச் செல்வம் வேண்டி வருபவர்களே அதிகம். பிள்ளைப் பேறளிப்பதில் இவ்வன்னை வரப்பிரசாதி. இக்கோயிலில் வினோதமான ஒரு வழக்கம் உள்ளது. கோயிலுள்ள பொருட்களை பக்தர்கள் எடுத்துச் செல்லக்கூடாதென்பது பொதுவாக கடைப்பிடிக்கப்படும் மரபு. திருட்டுக்க சமமான குற்றம் அது. ஆனால் இங்கு கோயிலிலுள்ள பொருளை எடுத்துச் செல்வது வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது.
பிள்ளைவரம் வேண்டுவோர் கணவனும் மனைவியும் சேர்ந்து கோயிலுக்கு வருகின்றனர். அப்போது மரத்தால் செய்யப்பட்ட குடுவை ஒன்றைக் கொண்டுவந்து அம்மனுக்கு முன் வைத்துவிட்டு வேண்டிக்கொள்கின்றனர். திருப்பிச் செல்லும்போது அங்கிருக்கும் வேறொரு குடுவையை எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். குழந்தை பிறந்ததும், அந்த குடுவையுடன் இன்னுமொரு குடுவையும் செய்துகொண்டு கோயிலுக்கு வருகிறார்கள். குழந்தையை அன்னையின் காலடியில் வைத்து வணங்கிவிட்டு அன்னதானம் செய்கிறார்கள். இரண்டு குடுவைகளையும் அங்கேயே விட்டுச் செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இந்த வழிபாட்டை பெரும்பாலும் ஆடி மாதத்தில் செய்கிறார்கள். பந்தண்டி என்ற துறவி இக்கோயிலில் இருந்து அன்னையை வழிபட்டு அங்கேயே சமாதி அடைந்தார். அவரது சமாதிக்கோயில் கோயில் வளாகத்திலேயே உள்ளது எனவே இது சித்தர் பீடமாகவும் திகழ்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வினோதமான வழிபாடு நடக்கும் இக்கோயில் உத்தரகண்ட் மாநிலத்தில், ரூர்கி என்னும் நகருக்கு அருகிலுள்ள கடியால் கிராமத்தில் உள்ளது. டெல்லியிலிருந்து ஹரித்வார் செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ளது ரூர்கி. சுமார் நான்கரை மணி நேரம் பயணிக்க வேண்டும்.