பதிவு செய்த நாள்
02
மார்
2016
05:03
புழு, வண்டையே நினைத்து நினைத்து வண்டாகவே மாறிவிடுகிறது என்பர். இதனை பிரமகீடக நியாயம் என்று வேதாந்தம் கூறும். வெள்ளைத் துணியை எந்த நிறச் சாயத்தில் தோய்த்து எடுக்கிறோமோ, அந்த நிறச் சாயத்தைத் துணி பெற்றுவிடுகிறது. சந்தனத்தை அரைக்க அரைக்க, சந்தனத்தின் நறுமணம் அதை அரைத்த கைக்கும் வந்து விடுகிறது. இறைக்க இறைக்கக் கிணறு சுரக்கிறது. சுடச்சுடப் பொன் ஒளிர்கிறது. இவைப்போல் இறைவனை நினைக்க நினைக்க பக்தி வளர்கிறது. நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் இறைவன் பாலில் நெய்போல், விறகில் தீ போல் மறைந்திரு க்கிறான். பாலில் நெய் இருந்தாலும், விறகில் தீ இருந்தாலும் உரிய முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே அவை வெளிப்படும்.
ஜபம், தியானம், பிரார்த்தனை, சுவாத்தியாயம் (சாஸ்திரங்களைப் படித்தல்), சத்சங்கம் ஆகியவற்றுக்கு வாழ்க்கையில் நாம் தலையாய முக்கியத்துவம் தர வேண்டும். அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் போன்ற ஒழுக்கங்களைப் பரிந்தோப்பி பேணிப் பாதுகாக்க வேண்டும். உணவு உழைப் பு, உறக்கம், உடலுறவு, எண்ணங்கள் ஆகியவற்றில் ஒழுங்கும் கட்டுப்பாடும் வரையறையும் இருக்க வேண்டும். இந்த ஐந்தில் எந்த ஒன்றைப் புறக்கணித்தாலும், சரிவர ஆன்மிகச் சாதனைகளை மேற்கொள்ள முடியாது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், முயற்சி திரு வினையாக்கும், எறும்பூரக் கல்லும் தேயும், அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதெல்லாம், தொடர்ந்து மேற்கொள்ளும் பக்தி வாழ்க்கைக்கும் பொருந்தும்.