பதிவு செய்த நாள்
04
மார்
2016
04:03
மகாராஷ்டிர மாநிலத்தில், சித்த சக்தி பீடம் என்று சொல்லப்படும் ரேணுகாதேவி கோயில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த பலரும். இந்த அன்னையை குல தெய்வமாக வழிபடுகிறார்கள். யார் இந்த ரேணுகாதேவி? கன்னியாகுப்ஜத்தை ஆண்ட மன்னன் ரேணுவின் மகள் ரேணுகா. அவள் உரிய பருவத்தை அடைந்ததும் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார் மன்னன் பலநாட்டு அரசர்களும் முனிவர்களும் கலந்து கொண்ட அந்த சுயம்வரத்தில், ஜமதக்னி முனிவருக்கு மாலையிட்டு மணாளனாகத் தேர்ந்தெடுத்தாள் ரேணுகா பின்னர் இருவரும் பாகீரதி நதிக்கரையில் மகோதலப்பூர் என்னும் கிராமத்தில் இல்லறம் நடத்தினர். அவர்களுக்கு அக்னி பகவானின் அருளால் வசு, வாயு பகவானின் அருளால் விஸ்வாசு, சூரிய பகவானின் அருளால் பிரம்மதானு, இந்திரனின் அருளால் விரத்கன்வ என்னும் நான்கு மகன்கள் பிறந்தனர்.
இந்த நிலையில் நாரதர் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, ரேணுகா வயிற்றில் ஐந்தாவது மகனாக தாமே அவதரிக்க உள்ளதாகக் கூறியருளினார். அதன்பின்னர் ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்ற நாரதர், உங்களுக்கு மகாவிஷ்ணுவே மகனாகப் பிறப்பார். அந்தணர் குலத்தில் பிறந்தாலும் ஷத்ரிய குணத்தோடுதான் அந்தப் பிள்ளை வளரும் சிவன் தந்த பரசு என்னும் ஆயுதத்தை எப்போதும் வைத்திருப்பார் என்று கூறினார். அதன்படி அவதரித்தவரே பரசுராமர். இதன் தொடர்ச்சியாக ரேணுகா ஆற்றில் நீரெடுக்கச் சென்றதும் அங்கு சித்ரரதன் என்னும் கந்தர்வனின் பிரதிபிம்பத்தை நீரில் கண்டு ஒரு வினாடி மனதைப் பறிகொடுத்ததும் இதனால் அவளது பதிவிரதா தன்மை மாசுபட்டதாக கோபம் கொண்ட ஜமதக்னி ஆணையிட பரசுராமர் ரேணுகாவின் தலையை வெட்டியதும்; பின்னர் தந்தையின் வரத்தால் அவள் உயிர்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டாள்
பரசுராமர் கார்த்தவீரியன் என்னும் அரசனைக் கொன்றதால், அவன் மகன்கள் பரசுராமர் இல்லாத நேரத்தில் வந்து ஜமதக்னி முனிவரைக் கொன்றனர். தடுக்க வந்த ரேணுகாதேவியை 21 முறை தாக்கினர். பின்னர் அங்கு வந்த பரசுராமனிடம் நடந்ததைக் கூறினாள். ரேணுகா. (அதற்குப் பழிவாங்கவே க்ஷத்திரிய குலத்தை 21 தலைமுறைக்கு கருவறுத்தார் பரசுராமர்) தந்தையின் உடலை தகனம் செய்யும்போது, தாய் ரேணுகா தேவி பரசுராமரிடம் நானும் உன் தந்தையுடன் உடன்கட்டை ஏறுகிறேன். தீ மூட்டியதும் நீ திரும்பிப் பார்க்காமல் செல் என்றாள். சற்று தொலைவு சென்ற பரசுராமர் திரும்பிப் பார்த்துவிட்டார். உடலெல்லாம் எரிந்துவிட்ட நிலையில் தலை மட்டும் எரியாமல் நின்று விட்டது. அந்த தலைதான் இக்கோயிலில் தெய்வமாக அருள்புரிவதாக தலவரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் தேவியின் தலைமட்டுமே காணப்படுகிறது. கண்கள், மூக்கு வாய் ஆகியவற்றை மட்டுமே தரிசிக்கலாம். இந்த அம்மனுக்கு தினமும் ஆயிரம் வெற்றிலைகளை வைத்து பூஜை செய்கின்றனர். சித்ரா பவுர்ணமி, ஆஷாட பவுர்ணமி, நவராத்திரி, கார்த்திகைப் பவுர்ணமி, தத்தாத்ரேய ஜெயந்தி, சந்திர கிரகணம். சூரிய கிரகண நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஏராளமான மக்கள் இதில் கலந்துகொள்வார்கள். ஸ்ரீசேஷத்ரம், புருஷோத்தம க்ஷேத்ரம் என்றும் வழங்கப்பெறும். இப்பகுதியில் அத்திரி முனிவர் அனுசுயா தேவி தம்பதியர் வாழ்ந்த ஆசிரமங்கள் உள்ளன. தத்தாத்ரேயர் இங்குதான் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்று, அங்கிருந்து எட்டு மணிநேர பயண தூரத்திலுள்ள நண்டேட் என்னும் ஊருக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது மஹுர்காட் என்னும் ஊர் இங்குதான் இந்த புராணப் பெருமை வாய்ந்த இடம் அமைந்துள்ளது.