அநாதைச் சிறுவன் ஒருவனைப் பார்க்கிறோம். அவனுக்கும் நமக்கும் அவனுடைய பெற்றோர்கள் யார் என்று தெரியாமல் இருந்தாலும், அவனுக்குப் பெற்றோர்கள் உண்டு. என்று ஊகிக்கிறோம். அதுபோல் இந்த உலகைப் பார்க்கும்போது, இதைப் படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்று ஊகிக்கிறோம். எள்ளைப் பார்க்கிறோம். ஆனால் அதனுள் மறைந்திருக்கும் எண்ணெயை நாம் கண்ணால் பார்க்க முடிவதில்லை. கண்ணால் காண முடியாத காரணத்தால் மின்சாரம் போன்றவற்றை இல்லை என்று நாம் சொல்லிவிட முடியாது. அதுபோல், நமது அஞ்ஞானம் காரணமாக இறைவனை நாம் காண முடியாவிட்டாலும், இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பது முற்றிலும் உண்மை, உண்மை, உண்மை.
பகவான் ராமகிருஷ்ணர் இவ்விதம் கூறியுள்ளார்: இரவில் ஆகாயத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களைப் பார்க்கிறாய்; ஆனால் சூரியன் உதித்ததும் அவைகள் தென்படுவதில்லை; ஆதலால் பகல் பொழுதில் ஆகாயத்தில் நட்சத்திரங்களே இல்லையென்று சொல்லலாமா? மனிதனே உனது அஞ்ஞான காலத்தில் நீ இறைவனைக் காண முடியவில்லை என்பதால், இறைவனே இல்லையென்று சாதிக்காதே.