பதிவு செய்த நாள்
10
மார்
2016
04:03
மதுரை: ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இன்று (மார்ச். 10ல்) பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜயந்தி விழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணிக்கு வேதபாராயணம், 6.30 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண கோயிலை வலம் வரும் நாம சங்கீர்த்தனம், காலை 7.00 மணி முதல் விசேஷ பூஜை, 9.30 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திருவுருவப் படத்துடன் சாரதா வித்யாலயா பள்ளி மாணவ - மாணவிகளின் ஊர்வலம், 10.30 மணிக்கு ஹோமம், 11.15 மணிக்கு சுவாமி கமலாத்மானந்தரின் ஆன்மிகச் சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த விழாவில் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு: பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு நடமாடும் ஆன்மிகக் கலைக் களஞ்சியமாகவும், ஆன்மிக அகராதியாகவும் வாழ்ந்தார். ஆன்மிகம் அவரது வாழ்க்கையில் அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டது. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள் தவ வாழ்க்கையின் உச்சத்திலிருந்து வந்தவை. அதனால் அவை மந்திர சக்தியுடன் திகழ்கின்றன. அவரது வாழ்க்கையைப் பற்றி நாம் சரியாக ஒரு சிறிது புரிந்துகொண்டாலும், அது நம் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்து, நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திவிடும். பிறவித் துன்பங்களிலிருந்து உயிர்கள் விடுபட்டு, இறைவன் திருவடியாகிய முக்தி நிலையை அடைய வேண்டும் என்பது, அவர் உலகிற்கு வழங்கிய முக்கிய செய்தியாகும். உன் மனம் எப்போதும் இறைவனையே நாடியிருக்க வேண்டும் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரின் முதல் போதனை, முதன்மையான உபதேசம் என்று நான் கருதுகிறேன். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் படிக்கும்போது, இறைவனை அறிவதே ஞானம், இறைவனை அறியாதிருப்பதுதான் அஞ்ஞானம் என்ற உண்மையை நாம் புரிந்துகொள்கிறோம்.
இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதற்கு அன்றாட வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், நாம் இறைவனை அடைவதற்கு இருக்கும் தடைகள், நம்மாலும் இறைவனை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஆகியவற்றை ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்களிலிருந்து நாம் பெறுகிறோம். எத்தனை மதங்களோ, அத்தனையும் இறைவனை அடைவதற்குரிய பாதைகள் என்பது ஸ்ரீ ராமகிருஷ்ணர் உலகிற்கு வழங்கிய மற்றொரு முக்கிய செய்தியாகும். அவர், இந்தக் கலியுக மக்களுக்குப் பக்தியோகமே சிறந்தது என்றும் கூறியிருக்கிறார். முதலில் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, பிறகு பலாப்பழத்தை அறுக்க வேண்டும். அதுபோல் உலக வாழ்க்கையில் இருப்பவர்கள், முதலில் இறைவனிடம் பக்தியை வளர்த்துக்கொண்டு, பிறகு உலக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்று, ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார். நாம் பணத்தை வீணாகச் செலவழிக்கக் கூடாது, தண்ணீரை வீணாக்கக் கூடாது, மின்சாரத்தை வீணாகச் செலவழிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அது போலவே மனதை வீணாக்காகக் கூடாது என்பதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் மனதை வீணாக்காமல் வைத்திருந்து அதை இறைவனைப் பற்றிய சிந்தனையிலும், பயனுடைய செயல்களிலும் ஈடுபடுத்த வேண்டும்.
மிகவும் சிறிய பொருளையும் நாம் லென்ஸ் மூலம் பார்க்க முடியும். அது போல் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும் என்ற லென்ஸ் மூலம், நாம் அனைத்து சாஸ்திரங்களின் உட்பொருளையும் நன்றாக அறிந்துகொள்ள முடியும். வாழ்க்கையின் இலட்சியம் இறைவனை அடைதல், மக்களை இறைவனாகக் கருதி மக்களுக்குத் தொண்டு செய்தல், மதநல்லிணக்கம் ஆகிய மூன்று முக்கிய கருத்துக்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உலகிற்கு வழங்கிய செய்தியாகும். நெல்லை வயலில் விதைத்தால் அது முளைக்கிறது. அதே நெல்லைச் சற்று வறுத்துவிட்டு வயலில் விதைத்தால் - அது முளைக்காது. நெல் போன்று ஆத்மஞானம் பெறாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிகளுக்கு ஆளாகிறார்கள். வறுத்த நெல்லை வயலில் விதைத்தாலும் முளைக்காதது போல, ஆத்மஞானம் பெற்றவர்கள் மீண்டும் பிறவிகளுக்கு ஆளாகமாட்டார்கள். சாதாரண ஈ இறைவனுக்கு நைவேத்தியத்திற்கு வைத்திருக்கும் இனிப்புகள் மீதும் உட்காரும், சாக்கடையிலும் உட்காரும். ஆனால் தேனீ, தேனை மட்டும்தான் அருந்தும். அது போல் சாதாரண ஈ போன்று உலகப்பற்றுள்ளவர்கள் இறைவனையும் நினைக்கிறார்கள், உலக ஆசைகளிலும் உழல்கிறார்கள். ஆன்மப்பக்குவம் பெற்றவர்கள், தேனீ தேனை மட்டும் அருந்துவது போன்று, இறைவனுக்கு மட்டும் தங்கள் உள்ளத்தில் இடம் தருவார்கள். ஒருவன் மரண சமயத்தில் எத்தகைய சிந்தனைகளைக் கொண்டிருக்கிறானோ, அதற்கேற்பவே அவனுக்கு மறுபிறவி அமையும் என்று பகவத்கீதை போன்ற சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் உலகில் வாழும்போதே, மரண சமயத்தில் இறைவன் நினைவு வரும் வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
புதிய ஒரு வெள்ளைத்துணியை நாம் எந்த நிறச் சாயத்தில் தோய்த்து எடுத்தாலும், வெள்ளைத்துணி அந்த நிறத்தைப் பெற்றுவிடுகிறது. வெள்ளைத் துணி போன்றதுதான் நம் மனமும். நாம் நம் மனதில் இறைவனைப் பற்றிய சிந்தனைகளை வைத்திருந்தால், நமது மனம் தெய்வத்தன்மை வாய்ந்ததாக ஆகிவிடும். இறைவனே! என் கடந்த கால முற்பிறவி வினைகள், நிகழ்கால இந்தப் பிறவி வினைகள், எதிர்கால வினைகள் ஆகியவற்றை நான் உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். இந்த எல்லாவிதமான வினைகளிலிருந்தும் என்னை விடுவித்து, எனக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி தந்தருளுங்கள் என்று இறைவனிடம் நாம் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு பணக்காரன் வீட்டில் ஒரு வேலைக்காரி வேலை செய்கிறாள். அவள் அந்த வீட்டிற்கு உரிய எல்லா வேலைகளையும் முழு கவனம் செலுத்திச் செய்கிறாள். என்றாலும் அவள் தன் மனதில் தனக்கு வேறு ஓர் இடத்தில் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறாள். அது போல் இந்த உலகில் வாழும் நாம் நமக்குரிய அனைத்து கடமைகளையும் செய்தாலும், நம்முடைய சொந்த இருப்பிடம் இறைவன்தான் என்பதை மனதில் நாம் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.
நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை, உனக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொல்வது வழக்கம். கிராமத்தில் உள்ள ஒருவன் ஒரு பெரிய நகரத்திற்கு ஏதோ வேலையாக வருகிறான். அவருடைய நிரந்தரமான இருப்பிடம் நகரமல்ல. அதுபோல் நாம் இந்த உலகில் பிறந்து சிறிது காலம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த உலகம் நம்முடைய நிரந்தரமான இருப்பிடமல்ல. நம்முடைய நிரந்தரமான இருப்பிடம் இறைவனின் திருவடிகள்தான்.
நாம் யாரையெல்லாம் மதிக்கிறோமோ, யாரிடமெல்லாம் அன்பு செலுத்துகிறோமோ, யாரிடமெல்லாம் பழகுகிறோமோ, யாரிடமெல்லாம் தொடர்பு வைத்திருக்கிறோமோ அவர்களை நாம் இறைவனின் வடிவங்கள் என்று கருத வேண்டும். இது மிகவும் உயர்ந்த ஒரு ஆன்மிக சாதனையாகும். இந்த ஆன்மிக சாதனை காலப்போக்கில் நிச்சயம் நமக்கு நல்ல ஆன்மிகப் பக்குவத்தைக் கொடுக்கும். பித்தளைப் பாத்திரத்தை நாள்தோறும் தேய்த்து சுத்தப்படுத்தினால், பித்தளைப் பாத்திரம் பளபளப்பாக இருக்கும். பித்தளைப் பாத்திரத்தை அப்படியே தேய்க்காமல் விட்டுவிட்டால், அதில் அழுக்கேறி களிம்பேறிவிடும். மனம் பித்தளைப் பாத்திரம் போன்றது. பித்தளைப் பாத்திரத்தைத் தேய்த்துச் சுத்தப்படுத்துவதுபோல், நாள்தோறும் இறைவனைப் பற்றிய சிந்தனை நம் உள்ளத்தில் இருக்க வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் மனதில் அழுக்கு சேர்ந்துவிடும் என்று சொற்பொழிவாற்றினார்.
ஆரதி, பிரார்த்தனைக்குப் பிறகு சுமார் 500 பக்தர்களுக்குப் பிரசாதமாக பகலுணவு வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு விசேஷ பக்தி பாடல்கள் - பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.