பதிவு செய்த நாள்
17
மார்
2016
11:03
கோவை: ஸ்ரீ தியாகராஜர் எனும் இசை நாடகம், கோவையில் வரும், 19ல் அரங்கேறவுள்ளது. சங்கீத மும்மூர்த்திகளில் தனக்கென தனி இடம் பெற்ற தியாகராஜ ஸ்வாமிகளின் சரித்திரத்தை, அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீ தியாகராஜர் தயாரிக்கப்பட்டுள்ளது. மேடையேறிய குறுகிய காலத்திலேயே, 20 காட்சிகளை கடந்து வெள்ளிவிழா நோக்கி பயணிக்கிறது. சென்னை, மதுரை, ஐதராபாத், மும்பை, டில்லி என வெளியூர்களிலும் அரங்கம் நிறைந்த ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.பிரபல எழுத்தாளர் வீயெஸ்வி, கதை வசனம் எழுதியுள்ளார். சிறப்பாக இசையமைத்துள்ளார், கர்நாடக இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ. கர்நாடக இசைக்கலைஞர்கள் சேத்தலை ரங்கநாத சர்மா, ஓ.எஸ்.அருண், குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா, அஸ்வத் நாராயணன், பாடல்களை பாடியுள்ளனர். எம்பார் கண்ணன், பாலசாய், கணபதி ராமன் போன்ற பக்க வாத்தியக்கலைஞர்கள், பின்னணி இசைக்கு மெருகூட்டியுள்ளனர். தியாகராஜராக, டிவி வரதராஜன் வாழ்ந்திருக்கிறார். இந்த இசை நாடகம், முதல்முறையாக, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் வரும், 19 மாலை, 6:00 மணிக்கு அரங்கேறவுள்ளது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை.