பதிவு செய்த நாள்
17
மார்
2016
12:03
திருநெல்வேலி: சங்கரன்கோவிலில், அறநிலையத் துறைக்குச் சொந்தமான, சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன், பண்பொழி கோவில் உதவி செயல் அலுவலர் செல்வக்குமாரி முன்னிலையில் நடந்தது. இதில், ஒரு சில ஆன்மிக அன்பர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில், உண்டியல் பணம் எண்ண, ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும், சங்கரநாராயண சுவாமி கோவில் ஆரம்ப பாடசாலை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும், 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பள்ளி சீருடையில் இருந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி, கோவில் உண்டியல் பணத்தை எண்ண வைத்ததாக, மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். - நமது நிருபர் -