பதிவு செய்த நாள்
18
மார்
2016
12:03
ஈரோடு: ஆற்றில் ஆகாய தாமரை படர்ந்திருப்பதால், அகத்தியர் வழிபட்ட கோவிலில், நித்ய பூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு காங்கேயம்பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவே நட்டாற்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அகத்தியர் இங்கு மணலை, சிவலிங்கமாக்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. கோடை காலத்தில் ஆற்றில் நீரோட்டம் இல்லாத நாட்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல முடியும். பிற நாட்களில் நீரோட்டம் காரணமாக, பரிசல் மூலமாகத்தான் செல்ல முடியும். காங்கேயம்பாளையத்தில் இருந்து தினமும், மூன்று வேளைகளும் பரிசலில் செல்லும் பூசாரி, கோவிலில் நித்ய பூஜைகளை செய்வது வழக்கம். அதிக நீரோட்டம் இருக்கும் காலத்திலும் கூட பூஜை முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மேட்டூரில் இருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நீரோட்டம் முற்றிலுமாக குறைந்துள்ளது. தற்போது குறைந்த அளவிலான தண்ணீரே உள்ளது. ஆனாலும் அது தெரியாத அளவுக்கு, எங்கும் ஆகாய தாமரைகளே காணப்படுகிறது. இதனால் பரிசலில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக, கோவிலில் நித்ய பூஜை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நன்செய் ஊத்துக்குளி பஞ்சாயத்து அல்லது மொடக்குறிச்சி யூனியன் நிர்வாகம்தான், ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். அவர்களால் முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், ஆகாய தாமரைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க, வேண்டுகோள் எழுந்துள்ளது.