அரிச்சந்திர மகாராஜாவின் வம்சத்தில் வந்தவன் பாகு மன்னன். ஹேஹயர்களிடம் தோற்ற அவன். கர்ப்பிணி மனைவியுடன் காட்டுக்குச் சென்றான். அங்கு அவனது இரண்டாவது மனைவி பொறாமையால் கர்ப்பவதிக்கு விஷம் கொடுத்தாள். நஞ்சுண்ட அக்குழந்தை சாகாமல் ஏழாண்டுகள் கருவிலேயே இருந்தது. வயோதிகத்தால் பாகு மரணமடைய, கர்ப்பிணி மனைவி உடன்கட்டை ஏற முற்பட்டாள். அப்போது அருகிலிருந்த ஔரவ முனிவர். கர்ப்பிணி சிதையிலேறுவது பாபம். உன் வயிற்றில் ஏராளமான யாகங்களை நடத்தும் ஒரு கீர்த்திமான் இருக்கிறான் என்று கூறி அவளை ஆசிரமம் அழைத்து வந்தார். சில தினங்களில் நீல மேனியுடன் சகரன் பிறந்தான். அவனுக்கு சகல வித்தைகளையும் கற்பித்தார் முனிவர்.
ஒருநாள் சகரன் தனது வரலாற்றை தாய் கூறக்கேட்டு, ஹேஹயர்களையும், அவர்களோடு தொடர்புடையவர்களையும் அழிக்க முற்பட்டான். அவர்கள் வசிஷ்ட மகரிஷியைச் சரணடைந்தனர். சகரா, க்ஷத்ரியன் சரணடைந்தாலே சவம்தான். செத்தவர்களை சாகடிப்பது வீரனுக்கு அழகல்ல என்றார் வசிஷ்டர். பிறகு சகரன் அயோத்தி சென்று கஸ்யபரின் மகள் சுமதியையும், விதர்ப்ப இளவரசி கேசினியையும் மணந்து நீதி பரிபாலனத்தோடு ஆட்சி புரிந்தான். கேசினிக்கு அஸமஞ்ஜஸன் பிறந்தான். சுமதிக்கு 60,000 பிள்ளைகள் பிறந்தனர்.
அஸமஞ்ஜஸன் முற்பிறவியில் வைச்ய குலத்தில் பிறந்திருந்தான். செல்வந்தனான அவன் காட்டில் ஒரு புதையலைக் கண்டான். அதைக் காத்து வந்த பிசாசு. என் பசிக்கு மாமிசத்தை அளித்துவிட்டு பிறகு புதையலை எடுத்துக்கொள் என்றது. புதையலை வீட்டில் வைத்துவிட்டு மாமிசத்தோடு வருகிறேன். என்று சொல்லிச் சென்ற வைசியன், பிசாசை ஏமாற்றி விட்டான். அதனால் வைசியனின் ஆயுள் குறுகி, மரண மெய்தினான். அவனே, சகரனின் புதல்வன் அஸமஞ்ஜஸனாகப் பிறந்திருந்தான். பிசாசு அவனுடலில் புகுந்து குழந்தைகளையும், பெண்களையும், கிழவர்களையும் வெட்டி சரயூ நதியில் எறிந்தது. வயதானால் மாறிவிடுவான் என சகரன் பொறுமையாய் இருந்தான். ஆனால், அஸமஞ்ஜஸன் மாறாததால் அவனை நாடு கடத்தினான். பின்னர், போரில் பல உயிர்களைக் கொன்ற பாபம் தீர அஸ்வமேத யாகம் தொடங்கினான்.
யாகக் குதிரையை ஒருவன் களவாடி பாதாளத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபிலர் ஆசிரமத்துக்கருகில் விட்டு விட்டான். சகரன்-சுமதியின் பிள்ளைகள் 60,000 பேர் குதிரையைத் தேடி பாதாளம் சென்றனர். கபிலரே குதிரையை களவாடியதாக எண்ணி, அவரைத் தாக்கப் பாய்ந்தார்கள். கபிலர் அவர்களை உற்று நோக்க, அனைவரும் பஸ்பமானார்கள். இதை அறிந்த சகரன், அஸமஞ்ஜஸனின் குமாரன் அம்சுமானை குதிரையை மீட்டு வர அனுப்பினான். அவன் கபிலரை வணங்க, இளவரசே! யாகக் குதிரையைக் கொண்டுபோய் வேள்வியை முடிக்கச்சொல் உன் மகன் திலீபனுக்கு பகீரதன் பிறப்பான். அவன் கங்கையை பூலோகத்துக்குக் கொண்டு வந்து உன் பிதுர்க்களின் சாம்பலைக் கங்கையில் கரைத்து சுவர்க்கம் சேர்ப்பான் என்றருளினார்.