பதிவு செய்த நாள்
28
மார்
2016
04:03
நவக்கிரஹங்களில் ஒருவரான புதனின் மகன் புரூரவஸ். கேசி எனும் அரக்கன் அப்சரஸ்களான ஊர்வசி, சித்ரலேகாவைத் தூக்கிச் சென்றான். இந்திரன் புரூரவஸிடம் உதவி கேட்க, அவன் கேசியோடு யுத்தம் செய்து தேவமங்கையரை மீட்டு வந்தான். ஊர்வசியும் புரூரவஸும் ஒருவர் மீது ஒருவர் பிரேமையுற்றனர். நாட்டியாச்சாரியரான பரதர், லக்ஷ்மி சுயம்வரம் என்ற நாட்டிய நாடகத்தை நடிக்கும்படி ஊர்வசியிடம் கூறினார். நாடகத்தின் இறுதியில் லக்ஷ்மியாக நடித்த ஊர்வசி, புரூரவஸ் கழுத்தில் மாலையைப் போட, பரத முனிவர் சீற்றமடைந்தார். ஊர்வசி விஷ்ணுவாக நடிக்கும் நங்கையின் கழுத்தில் மாலை சூட்டாமல் இதென்ன மோக விகாரம்! அதனால் நீ, 55 ஆண்டுகள் கொடியாக இருக்கக் கடவது; புரூரவஸ் உன்னருகே பேயாய் அலையக் கடவது! பிறகு இருவரும் பூலோகத்தில் வாழ்ந்து எட்டு பிள்ளைகளைப் பெறுவீர்கள்! என சபித்தார்.
புரூரவஸின் பேரன் ரஜி. தேவ- அசுரப் போர் வெற்றி, தோல்வி தெரியாமல் நீண்டு கொண்டிருந்தது. இரு பிரிவினரும் பிரம்மாவிடம் யோசனை கேட்க, ரஜி யார் பக்கம் சேர்ந்து சண்டையிடுகிறானோ அவர்களுக்கே வெற்றி கிட்டும் என்றார் நான்முகன். அசுரர்கள் முதலில் ரஜியிடம் உதவி வேண்ட, என்னை இந்திரனாக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான் ரஜி. பிரகலாதரே எங்கள் தலைவர் என்றனர் அசுரர்கள். அடுத்து, இந்திரன் தலைமையில் தேவர்கள் உதவி கேட்டனர். ரஜி தன் நிபந்தனையைக் கூற, தேவர்கள் சம்மதித்தனர்.
கடும் யுத்தத்துக்குப் பிறகு அமரர்கள் ஜெயித்தனர். இந்திரன், ரஜியின் கால்களில் விழுந்து, தந்தையே! ஆபத்தில் காத்ததால் நீங்கள் என் பிதாவாகிறீர்கள்! தங்கள் புதல்வனான நான் திரிலோகாதிபதியாயிருந்தால் தகப்பனாருக்குப் பெருமையல்லவா? என முகஸ்துதி செய்தான் ரஜி. அதில் மயங்கி வாழ்த்தி விடைபெற்றான். ரஜியின் காலம் முடிந்தது. ரஜியின் பிள்ளைகளிடம் நாரதர் நடந்ததைக் கூறினார். அவர்கள் இந்திரனோடு போரிட்டு அமராவதியைக் கைப்பற்றினர். இந்திரன் பிரகஸ்பதியிடம் இதற்கு நிவாரணம் கேட்க, இந்திரா பதவியால் அகந்தை கொண்டாய் என்று கூறி, அபிசார ஹோமம் நடத்தினார். இதனால் ரஜி புத்திரர்கள் புத்தி மயங்கி, தர்மங்களைக் கைவிட்டு, யாகங்களை அழித்தனர். அதோடு இந்திரனின் தேஜஸ் பெருகி, ரஜி புத்திரர்கள் மீது படையெடுக்க, அவர்கள் தோற்று சுவர்க்கத்தை விட்டு ஓடினர்.
புரூரவஸின் வம்சத்தில் பிறந்தும் எங்களுக்கேன் இந்நிலைமை? என்று ரஜி புத்திரர்கள் நாரதரிடம் கேட்க, புரூரவஸ் முற்பிறவியில் த்விஜக்ராமம் என்ற ஊரில் அந்தண குலத்தில் பிறந்திருந்தார். மறு ஜன்மாவில் அவர் மன்னர் குடியில் பிறந்து, துவாதசி உபவாசமிருந்து விஷ்ணு பூஜை செய்தார். ஒரு துவாதசியில் எண்ணெய் தேய்த்து நீராடினார். விரத தினங்களில் எண்ணெய் ஸ்நானம் கூடாது என்பது விதி. துவாதசி விரத மகிமையால் மத்ர தேச அரச குலத்தில் பிறந்தார். ஆனால், விரத நாளில் தைலக் குளியல் கொண்டதால் குரூபியாய் இருந்தார். குரூபி சிம்மாசனம் ஏற முடியாது என்பதால், அத்ரி மகரிஷியின் ஆசிரமத்தில் தவமிருந்து சுந்தர வடிவம் பெற்றார். விஷ்ணுவை நீங்களும் ஆராதித்தால் புத்தி ஸ்வாதீனப்படும். தேவ ஆராதனமின்றி பரம்பரை மட்டுமே தேஜஸையும், புகழையும் தராது என்று நாரதர் கூற, ரஜி புத்திரர்கள் ஸ்ரீமந் நாராயணரை வழிபட்டு கீர்த்தி பெற்றனர்.