திருப்பரங்குன்றத்தில் நக்கீரருக்காக முருகன் உருவாக்கிய கங்கை தீர்த்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2016 04:03
சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவ வழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச் செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னிதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும் காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.