பதிவு செய்த நாள்
26
ஆக
2011
11:08
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த 540 கோவில்களில், ஒருவேளை பூஜைக்கு கூட வழியில்லாத அவலம் நீடிக்கிறது. வருமானம் வராத கோவில்களை இந்து அறநிலையத்துறை புறக்கணிப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 848 இந்து கோவில்கள் உள்ளன. மேலும் மடம், கட்டளை என 12 உள்ளன. இதில் ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோவில்களாக திருவள்ளூர், பெரியபாளையம், திருத்தணி ஆகிய இடங்களில் மூன்று கோவில்கள் மாவட்டத்தில் உள்ளன.5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய்வரை ஆண்டு வருமானம் உள்ள கோவில்களாக, தொட்டிக்கலை ஆதிகேசவ பெருமாள் கோவில், புட்லூர் பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், செம்புலிவரம் செங்காளம்மன் கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என, நான்கு கோவில்கள் உள்ளன. 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், 93 உள்ளன.வருமானம் குறைவான கோவில்கள்: மீதமுள்ள 748 கோவில்களும், 12 மடம் மற்றும் கட்டளைகளும் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் உள்ள கோவில்களாக உள்ளன. இக்கோவில்கள் பட்டியலை சாராத கோவில்கள் என கூறப்படுகின்றன. இக்கோவில்களை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இம்மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொன்மை வாய்ந்த கோவில்கள் பாழடைந்து கிடக்கின்றன. மேலும், மின் விளக்கு வசதிகள் இல்லாமலும், ஒரு வேளை பூஜை கூட நடத்த இயலாமலும் 540 கோவில்கள் உள்ளன.கோவில்களின் அவலநிலை குறித்து கேட்டபோது,பெயர் கூற விரும்பாத இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் ஒருவர், ""பாழடைந்த கோவில்களை சீரமைக்க கிராம மக்கள் நிதி வசூலிக்கும் தொகையில், மூன்றில் ஒரு பங்கு நிதியை அரசு வழங்கும். அப்பணத்தில் கோவில் புனரமைப்பு செய்யலாம், என்றார்.
செயல் அலுவலர் பதவி காலி: இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களை நிர்வகிக்க செயல் அலுவலர்கள் நிலை-1 பதவியில் 4ம், நிலை-2 பதவியில் 4ம், நிலை-4 பதவியில் 3ம் காலியாக உள்ளன. செயல் அலுவலர்கள் நிலை-3 பணி மட்டும் உள்ளது. மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பணியிடமும் காலியாக உள்ளது. இந்த செயல் அலுவலர்கள் ஒவ்வொருவரும் கூடுதல் பொறுப்பு என, 20க்கும் மேற்பட்ட வருமானம் கொண்ட கோவில்களின் பொறுப்பை கவனித்து வருகின்றனர். இவர்கள் உண்டியல் எண்ணிக்கைக்கு மட்டும் வந்து உண்டியல் பணத்தை அறங்காவலர்களின் முன்னிலையில் எண்ணி எடுத்துச் செல்வதோடு, தங்கள் கடமையை முடித்துக் கொள்கின்றனர். இதனால் புராதன சின்னங்கள் கொண்ட, பல நூற்றாண்டுகள் தொன்மை வாய்ந்த கோவில்கள் சீரழிந்து, மறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.