பதிவு செய்த நாள்
24
மார்
2016
01:03
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில், பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு நடப்பாண்டு பங்குனி உத்திர விழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. சுவாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. தேர்நிலையில் வைக்கப்பட்டு, தலைமை குருக்கள் ராமநாதசிவம் சிறப்பு பூஜை நடத்தினார். காலை, 6.40 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள், அரோகரா; அரோகரா; முருகனுக்கு அரோகரா; கந்தனுக்கு அரோகரா என, பக்தி கோஷங்களை எழுப்பினர். தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதி வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். மாலை தேர்நிலை சேர்ந்தது. இன்று காலை பரிவேட்டை நிகழ்ச்சியும். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை காலை, 8 மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சி, இரவு, 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது.