பதிவு செய்த நாள்
25
மார்
2016
12:03
கூடலூர்: "கண்ணகி கோயிலில் மூன்று நாட்கள் விழா கொண்டாட அனுமதி கோரி, இடுக்கி கலெக்டரிடம் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் மனு கொடுத்தனர். தமிழக- கேரள எல்லையில் வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இங்கு செல்ல குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியாக 15 கி.மீ., தூரத்திற்கு ஜீப் பாதையும், லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கி.மீ., தூரத்திற்கு நடைபாதையும் உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று இங்கு விழா கொண்டாடப்படும். தமிழக- கேரள பக்தர்கள் அதிகம் செல்வர். காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதியுண்டு. இதனால், தமிழகத்தின் நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயில் தரிசனத்திற்கு வந்து திரும்ப முடியவில்லை.
கலெக்டரிடம் மனு இந்நிலையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் இடுக்கி கலெக்டர் கவுசிகனிடம் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக- கேரள மக்கள் இணைந்து மங்கலதேவி கண்ணகி கோயிலில் அம்மனை தரிசனம் செய்து வருகிறோம். சென்னை, நாகப்பட்டணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவார்கள். நீண்ட தொலைவில் இருந்து வந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் தரிசனம் செய்து திரும்ப முடியவில்லை.பல ஆண்டுகளுக்கு முன் வரை மூன்று நாள் விழா கொண்டாடப்பட்டு வந்தது. எனவே இந்த ஆண்டு மூன்று நாள் விழா கொண்டாட அனுமதி தரவேண்டும், என கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் இதுபோன்ற மனு தேனி கலெக்டர் வெங்கடாசலத்திடம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.