பதிவு செய்த நாள்
31
மார்
2016
11:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 12 கால யாகசாலை பூஜையுடன், ஏப்., 3ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், 12 கால யாகசாலை பூஜையுடன், ஏப்., 3ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதுகுறித்து, கோவில் இணை ஆணையர் காவேரி கூறியதாவது: கடந்த செப்., மாதம், கிழக்கு ராஜகோபுரம், மேற்கு கோபுரம் மற்றும் 15 சன்னிதி விமானங்களுக்கு முதற்கட்டமாக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கப்பட்டன. கோபுரங்கள், வாகனங்கள், கோவில் குளம், கோவில் வளாகம் உள்ளிட்டவை, ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்றன. சன்னிதிகளுக்கான பாலாலயம் வரும், 29ம் தேதி நடக்க உள்ளது. அனைத்து திருப்பணிகளும் நிறைவடைந்ததும், வரும், ஏப்., 3ம் தேதி காலை, 8:30 முதல், 9:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கும்பாபிஷேகத்தை காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, பாதுகாப்பு, மருத்துவ உதவி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும்.அதேபோல், வரும், 28ம் தேதி முதல் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக தீயணைப்பு நிலையமும் அமைக்கப்படும். கும்பாபிஷேகம், தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமாக யாக சாலை போடப்பட்டுள்ளது.
பூஜைகள் துவக்கம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, லக்ன பத்திரிகை வாசிப்புடன் பூஜைகள் துவங்கின. ஏப்., 2ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்துதல், ஏப்., 3ம் தேதி காலை, 7:45 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, காலை, 8:30 முதல், 9:50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.