கருடனைக் கண்டாலும், அதன் குரலைக் கேட்டாலும் புண்ணியம் என்பதை, காருட தர்சனம் புண்யம் ததோபித்வனிருச்யமாதோ என்கிறது ஸ் லோகம். பறவை இனத்தின் அரசன் என்பதால் கருடனுக்கு பட்சிராஜன் என்றும் பெயருண்டு. கருட்என்ற சொல்லுக்கு சிறகு என்பது பொருள். பெரிய சிறகுகளைக் கொண்டதால் கருடன் என்று பெயர் வந்தது. கஷ்யப முனிவருக்கும், வினதைக்கும் மகனாகப் பிறந்த இவர், வினதையின் பி ள்ளை என்னும் பொருளில் வைநதேயன் என்றும் அழைக்கப்படுகிறார். திருமாலுக்குத் தொண்டு செய்யும் அடியவர்களான நித்யசூரிகளில் முதன்மையானவர் கருடன் என்பதால், கருடாழ்வார் என்று குறிப்பிடுவர். வைணவ ஆச்சார்யரான சுவாமி தேசிகனுக்கு கருடாழ்வார் நேரில் வந்து ஹயக்ரீவ மந்திரம் உபதேசித்தார். தேசிகனும் கருடதண்டகம், கருட பஞ்சாசத் போன்ற ஸ்லோகங்களை இயற்றி கருடனைப் போற்றியுள்ளார்.