பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
03:04
தெய்வங்கள் கொலுவீற்றிருக்கும் உயர்ந்த இடங்களில் தாமரை மலர் முதன்மை பெற்றதாக விளங்குகிறது. பாரத தேசத்தில் வணங்கப்படும் அத்தனை தெய்வங்களும், தாமரை மலரில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாகவே புராணங்கள் கூறுகின்றன. செல்வத்தை அள்ளித் தரும் திருமகள் செந்தாமரையிலும், ஞானத்தை கைகூடச் செய்யும் கலை மகள் வெண் தாமரையிலும், வீரத்தையும் தைரியத்தையும் அருளும் பார்வதி தேவி பொன் தாமரையிலும், தேவர் உலகில் வீற்றிருக்கும் இந்திராணி நீலத் தாமரையிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருமால் கோயில்களில் உற்ஸவ காலங்களின்போது தாயாரை எழுந்தருளச் செய்ய பல்வேறு வாகனங்கள் உள்ளன என்றாலும், விசேஷமாக செந்தாமரை வாகனத்தில் தாயார் எழுந்தருளி பவனி வருவது தனிச்சிறப்பு.
தாமரையில் சிவப்பு, வெண்மை என பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் மக்கள் தாமரை மலரினை, இறைவன் - இறைவியைப் பூஜிக்கவும் அதன் அழகுக்காக மட்டுமே பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், அதன் மருத்துவப் பயன்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. வெண் தாமரை மலரின் மருத்துவப் பயன்களைக் காட்டிலும், செந்தாமரை மலருக்குச் சற்று கூடுதலான மருத்துவப் பயன்கள் உண்டு. பொதுவாக, தாமரை மலர் உடல் சூட்டைத் தணிக்கும் மிகச் சிறந்த மருந்து, அதோடு, இரத்த நாளங்களையும் ஒழுங்குபடுத்தக் கூடியது. செந்தாமரை இதழ்களை வெயிலில் உலர்த்தி, அதில் சுமார் முந்நூறு கிராம் அளவுக்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்து விட வேண்டும். இந்த செந்தாமரை நீர்க் கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேன் விட்டு இருபத்தியொரு நாட்களுக்குத் தொடர்ந்து குடித்து வர, இருதய நோய் சீர் அடையும்.
மகாலட்சுமி விரும்பி உறையும் விருட்சங்களாக வில்வம், நெல்லி, தாமரை, துளசி ஆகியன விளங்கினாலும், தாயாருக்கு மிகவும் உவப்பானது செந்தாமரை. வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருமகள் அந்தாதியில்.
உள்ளக் கமலத்தில் வந்து வந்து ஆடும் உனது அருள் இவ்
வெள்ளக் கமலப் புவியோர் முன்சற்று விளங்கல் என்றோ
கள்ளக் கமலனைப் பெற்றான் எந்நாளும் கலந்து உவகை
கொள்ளக் கமல மலர்மேல் குலவிய கோல்வளையே
எனப் போற்றிப் பாடியுள்ளார்.
பாற்கடலிடைப் பிறந்தாள் அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ- அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்
நாற்கரந்தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியன் பசுமையை விரும்பிடுவாள்.
என்று அழகுற வர்ணிக்கின்றனார் மகாகவி பாரதி.
தாமரை மலரை இருக்கையாகக் கொண்டவளே
தாமரை மலரைக் கையில் ஏந்தியவளே
வெண்மையான ஆடையாலும், நறுமணப் பூச்சாலும்
மாலையாலும் அழகாக விளங்குபவளே இறைவியே
திருமாலின் காதலியே மனத்தை அறிந்தவளே
மூன்று உலகங்களுக்கும் தலைமையை ஏற்றவளே
எனக்கு அருள் புரிக!
எனக் கோருகிறது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர மாலையில் பதினெட்டாம் பாடல்.
திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் அருள்பாலிக்கும் வேதவல்லித் தாயார், நவராத்திரி திருவிழாவின் ஐந்தாம் நாளில், தாமரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியில் உள்ளது அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில். இக் கோயிலில் உறையும் ராஜகோபால சுவாமி, பகவான் கிருஷ்ணரின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறார். குருவாயூரைச் சேர்த்து இத்திருத்தலத்தினை. தட்சிண துவாரகை (தெற்கு துவாரகை) என்றே குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய தீர்த்தங்களில் இக்கோயில் திருக்குளமும் ஒன்றாகும்.
குலோத்துங்க சோழ மன்னனால் இக்கோயில் (கி.பி. 1070-1125) சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்ட கல் தூண்களும் அவற்றில் அழகிய கற்சிற்பங்களும், மண்டபங்களும் அமைந்துள்ளன. சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. கோயிலைச் சுற்றிலும் பதினாறு கோபுரங்கள், ஏழு தூண்கள், ஏழு மண்டபங்கள், ஒன்பது புனித தீர்த்தங்கள், மூலவர் ராஜகோபால சுவாமி, மூலவர் செங்கமலத் தாயார் உள்ளிட்ட 24 சன்னிதிகளை உள்ளடக்கியதாக இக்கோயில் விளங்குகிறது.
கருவறையில் செங்கமலத் தாயார் கிழக்கு முகம் பார்த்துத் தனிச் சன்னிதி கொண்டிருக்கிறாள். மகா மண்டபத்தில் தாயாருக்கெனத் தனி கொடி மரம். கொடி மரத்தையடுத்து பலி பீடம். பலி பீடத்தின் கீழே மிகச் சிறு மாடத்தில் சுபர்ணீ. யார் இந்த சுபர்ணீ? கருடாழ்வாரின் தர்மபத்தினி. இந்த அமைப்பு வேறு எந்த வைணக் கோயில்களிலும் இல்லை எனப்படுகிறது. அதாவது, திருமாலின் தர்ம பத்தினிக்கு நேர் எதிராக கருடாழ்வாரின் தர்மபத்தினி. ஆடிப்பூரம் பத்துநாட்கள், செங்கமலத் தாயாருக்குப் பெருந் திருவிழா. அந்நாட்களில் தினமும் காலையில் பல்லக்கிலும், இரவினில் வாகனத்திலும் தாயார் பவனி. நான்காம் திருநாளன்று கருட வாகனத்தில் பெருமாளும், சிம்ம வாகனத்தில் தாயாரும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி. ஆடிப்பூரம் ஐந்தாம் திருநாளன்று செந்தாமரை வாகனத்தில் செங்கமலத் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.