பதிவு செய்த நாள்
04
ஏப்
2016
10:04
சென்னை: கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று, கயிலாய வாத்தியம், சங்கநாதம் முழங்க கோலாகலமாக நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
’கயிலையே மயிலை; மயிலையே கயிலை’ என்ற புகழுக்குரிய, மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த செப்., மாதம் பாலாலயம் செய்யப்பட்டு, ஒன்பது கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடந்தன. அதையடுத்து, கடந்த மார்ச், 26ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கின. மொத்தம், 12 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணியளவில், 12ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது. அதையடுத்து காலை 7:45 மணிக்கு கலச புறப்பாடு தொடங்கியது. பின்னர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர், நர்த்தன கணபதி உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளின் விமானங்கள் மற்றும் இரண்டு ராஜகோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு, சரியாக காலை, 8:45 மணியளவில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
’கபாலி, அரோஹரா’ என்ற கோஷத்துடன் பக்தர்கள், அந்த காட்சியை கண்டு வணங்கினர். காலை, 11:00 மணிக்கு மகாபிஷேகமும், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு, 9:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனங்களில், பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடைபெற்றன. மண்டலாபிஷேகம் நேற்று முதல் தொடங்கி, 48 நாட்களுக்கு நடைபெறுகிறது.
சிறப்பு அஞ்சல் முத்திரை: மயிலாப்பூர் அஞ்சல் நிலையத்தில், நேற்று காலை, 10:00 முதல் 12:00 மணி வரை சிறப்பு கவுன்ட்டர் இயங்கியது. அப்போது, கடிதங்களில் மயிலாப்பூர் கோவிலின் மயில் முத்திரை பதிக்கப்பட்டது. இந்த பிரத்யேக முத்திரையை பெற, நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று மயிலாப்பூர் தபால் நிலையத்தில் குவிந்தனர்.இதுகுறித்து எம்.சின்னப்பா என்பவர் கூறுகையில், ”இதுபோன்ற சிறப்பு தபால் முத்திரை கிடைக்க, இன்னும், 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்,” என்றார். - நமது நிருபர் -