பதிவு செய்த நாள்
05
ஏப்
2016
11:04
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில், சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,9ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,21 வரை நடக்கிறது. திருக்கல்யாணத்தை பார்க்க வரும் பக்தர்களுக்காக, வடக்காடி வீதி, மேற்கு ஆடி வீதிகளில் தற்காலிகமாக தகர ஷீட் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 4000 பேர் முன்னுரிமை அடிப்படையில், தெற்கு கோபுரம் வழியாக, கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
2000பேர்: ரூ.500 கட்டணத்தில் மேற்கு கோபுரம் வழியாகவும், 3500 பேர் ரூ.200 கட்டணத்தில் வடக்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாணத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர். இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். சித்திரை வீதி, ஆவணி வீதி உள்ளிட்ட இடங்களில் எல்.இ.டி., திரைகளில் நேரலையாக திருக்கல்யாணம் ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டிலுடன் பிரசாதம் வழங்கப்படும். 17 இடங்களில் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் இருக்கும். 40இடங்களில் கழிப்பிடமும், 5 இடங்களில் நடமாடும் கழிப்பிடமும் அமைக்கப்படும். 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.தேர் வரும் வீதிகளில் தற்காலிக கடைகள் தடுக்கப்படும். 20 தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்படும். 15 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும். தற்காலிக குப்பை தொட்டிகள் வைக்கப்படும்.
அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் 20 இடங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள், 5 அவசர ஊர்திகளுடன் முகாம் அமைக்கப்படும்.திருக்கல்யாண நாளில் காலை 6.00 மணி முதல் 2.00 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ஏப்.,18 முதல் ஏப்.,27 வரை பகல், இரவுகளில் கூடுதல் பஸ்கள் இயக்கவும், பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என்றார்.கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்துாரி, போலீஸ் துணை கமிஷனர் கங்காதர், டி.ஆர்.ஓ., வேலுச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஆறுமுக நயினார், கோயில் இணை கமிஷனர் நடராஜன் மற்றும் பலர் பங்கேற்றனர்.