பதிவு செய்த நாள்
30
ஆக
2011
11:08
சேலம்: சேலம், ராஜகணபதி கோவிலில், 12 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சேலம், தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, 12 நாள் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 1ம் தேதி அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10 முதல் மதியம் 12 மணிக்குள் அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடத்தப்படுகிறது. மறுநாள் 2ம் தேதி காலை 9 முதல் மதியம் 12 மணி வரை அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு வல்லபகணபதி அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மூலவர் குமார கணபதி அலங்காரத்தில் காட்சி தருவார். இரவு 8 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. செப்டம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 5ம் தேதி மூலவர் நாகராஜ கணபதி அலங்காரத்திலும், 6ம் தேதி சிறப்பு அலங்காரத்திலும், 7ம் தேதி ஸ்ரீகிருஷ்ண கணபதி அலங்காரத்திலும், 8ம் தேதி லட்சுணி கணபதி அலங்காரத்திலும், 9ம் தேதி முத்தங்கி அலங்காரத்திலும் மூலவர் அருள்பாலிக்கிறார். செப்டம்பர் 10ம் தேதி இரவு 12 மணிக்கு சிறப்பு மின்விளக்கு அலங்காரத்துடன் மலர் அலங்கார பல்லக்கில், ஸ்வாமி "சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஸ்வாமி திருவீதி உலாவும், 12ம் தேதி காலை 9 முதல் மதியம் 12 மணி வரை மஞ்சள் நீராட்டம், வசந்த உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு ஆஸ்தான பூஜைகள் நடக்கிறது.