பதிவு செய்த நாள்
30
ஆக
2011
11:08
திருநெல்வேலி : வெள்ளூரில் பழமைவாய்ந்த ஆழியங்கை பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நாளை (31ம் தேதி) துவங்குகிறது. 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த வெள்ளூரில் பழமைவாய்ந்த ஆழியங்கை பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஆழி என்றால் கடல், ஆழி என்றால் திருச்சங்கு. உலகம் உய்ய அன்பும், சமாதானமும் நிலைத்திட வன்முறையற்ற மனம் அழுத்தம் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சிகரமாகவும், ஆனந்தமாகவும் வாழ கடலில் பள்ளி கொண்டு திருச்சங்கை கையில் கொண்டிருக்கும் பெருமான், ஆழியங்கை பெருமானாக காட்சி தருகிறார். இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 2ம் தேதி கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை (31ம் தேதி) காலை 6 மணி முதல் 9 மணிக்குள் மங்களகரமான இசை முழக்கத்துடன் புனித தாமிரபரணி நதியில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்துவருதல், மாலை 6 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, துவங்குகிறது. முன்னதாக அனுக்கை, சங்கல்பம், புண்யாஹம், விஸ்வக்சேனர் ஆராதனை, வாஸ்துபூஜை, ம்ருத் சங்சரஹனம், பாலிகை பூஜை, அங்குரார்ப்பணம், வேத திவ்ய பிரபந்தங்கள் துவக்கம், ஸோமகும்ப பாலிகை ஸ்தாபனம், அங்குரார்ப்பண ஹோமம் நடக்கிறது. 1ம் தேதி காலை 8 மணிக்கு ரக்ஷா பந்தனம், கலாகர்ஷணம், பர்யக்னிகரணம், பஞ்சகவ்ய ப்ரோஷணம், மகாகும்ப ஸ்தாபனம், த்வார, கும்ப மண்டல பிரதிஷ்டை, ஆராதனம், அக்னிபிரதிஷ்டை, மானோன்மான சாந்திஹோமம், யகோத்த ஹோமாதிகள், பூர்ணாஹூதி, சாற்றுமறை நடக்கிறது. 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு கர்மாங்கஸ்த ஸ்நபந ஹோமம், அனைத்து மூர்த்திகளுக்கும் விமானத்திற்கும் திருமஞ்சனம், சதுஸ்தானார்ச்சனை, ஹோமதிகள், திசா ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, சயனாதிவாஸம் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 2ம் தேதி ஐந்தாம் கால பூஜை, விஸ்வ ரூப தரிசனம், சதுஸ்தானார்ச்சனை, காலை 7.15 மணிக்கு ஹோமதிகள், மகா சாந்தி ஹோமம், மகா பூர்ணாஹூதி தானதிகள் நடக்கிறது. காலை 8.15 மணி முதல் யாகசாலையில் இருந்து விமானத்திற்கு கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்யா லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு சாற்றுமுறை, கோஷ்டி மரியாதை செய்யப்படுகிறது. யாகசாலை பூஜைகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேவஸ்தானம் அர்ச்சகர் நந்துபட்டர், முரளிபட்டர் நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேகத்தில் ஆழ்வார்திருநகரி நாதமுனி திருவம்சம் அரைசயர் ஆச்சாரியர் நாதமுனிகள், ஸ்ரீரங்கம் ராமானுஜம் மடம் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீரங்கம் ராமாஜ மடம் ஸ்ரீரங்க வெங்க நாராயண ஜீயர் சுவாமிகள், ஆழ்வார்திருநகரி பரமஹஸ்ஸ எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று ஆசியுரை வழங்குகின்றனர். 2ம் தேதி காலை 9.30 மணிக்கு மதுரை காமாட்சி நிலையம் சந்திரன் குடும்பத்தார் சார்பில் அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுந்தரின் குருப்பிரியா இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், உயர்அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, அறங்காவலர் குழுத்தலைவர் பூசப்பாண்டி, தக்கார் ராமசுப்பிரமணியன், திருப்பணிக்குழு தலைவர் இலங்காமணி மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் செய்துள்ளனர்.