விழுப்புரம்: விழுப்புரம் ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு 10ம் ஆண்டு பாலாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதியில் அமைந்துள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில், ஏராளமான பெண் பக்தர்கள் லட்சம் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். காலை 10:00 மணிக்கு தெற்கு அய்யனார் குளக்கரையில் அமைந்துள்ள 90 அடி உயர ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு, பாலாபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிலை நிறுவனர் தனுசு, அறங்காவலர் குமார், நிர்வாகிகள் ராஜாமணி, ஜெயராமன், பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.