பதிவு செய்த நாள்
20
ஏப்
2016
11:04
உளுந்துார்பேட்டை : கூவாகம், கூத்தாண்டவர் கோவில் பெரு விழாவில், திருநங்கையருக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில், சித்திரை விழா, 5ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. கூவாகம், கூவாகம் காலனி, தொட்டி, நத்தம், அண்ணாநகர், சிவலிங்குளம், பாரதி நகர் உள்ளிட்ட, ஏழு கிராம பெண்கள், கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மறுநாள், பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி, 10ம் தேதி பாஞ்சாலி பிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று இரவு, சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொண்ட திருநங்கையர், இரவு முழுவதும் ஆடிப்பாடினர். மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா போன்ற நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான திருநங்கையர் பங்கேற்றனர். இன்று காலை, 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.