பக்தர்களுக்கு ஆசி வழங்க இன்று அழகர் புறப்படுகிறார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 11:04
அழகர்கோவில்: பக்தர்களை நேரில் சந்தித்து ஆசி வழங்க, இன்று(ஏப்.20) மாலை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் ஏப்., 22ல் மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார்.வரலாற்று சிறப்பு மிக்க அழகர்கோவில் சித்திரை திருவிழா ஏப்.,18ல் துவங்கியது. முதல் 2 நாட்களும் தோளுக்கினியான் அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்., 22ல் நடக்கிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார். கோயில் முன் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் வையாழியானவுடன் கொம்பு சாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின் ராஜகோபுரத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் 18ம் படி கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு மேள, தாளம் முழங்க புறப்படுகிறார்.
அழகர்கோவிலில் இருந்து மதுரை வரும் வழியில் பக்தர்களின் மண்டகபடிகளில் எழுந்தருளி, நாளை காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வரும் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர் கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து புதுாரிலும், மாலையில் அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.அதிகாலையில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படும் கள்ளழகர், காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது. பின் அங்கிருந்து புறப்படும் கள்ளழகருக்கு ராமராயர் மண்டபத்தில் காலை 10 மணிக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.