பதிவு செய்த நாள்
20
ஏப்
2016
11:04
அவிநாசி: ஓம் நமச்சிவாய கோஷத்துடன், அவிநாசியப்பர் தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள், தேர்களுக்கு எழுந்தருளினர். தேரோட்டம், நேற்று காலை 11:00 மணியளவில் துவங்கியது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமி, கூனம்பட்டி ஆதீனம் ராஜலிங்க சரவண மாணிக்கவாசக சுவாமி, புக்கொளியூர் ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, கலெக்டர் ஜெயந்தி, அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் ஆனந்த் உட்பட பலர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தும், அதை பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள், ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ரத வீதியில் இருந்து புறப்பட்டு, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகள் வழியாக சென்று, நண்பகல் 3:10க்கு, மீண்டும் தேர் நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில், திருமண மண்டபங்களில் அன்னதானம், நீர்மோர், குளிர்பானம், பானகம், குடிநீர் வழங்கப்பட்டன. ரத வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. ஒலிப்பெருக்கி மூலம், பொதுமக்களுக்கு தொடர்ந்து, பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டது. தேர் நிலையை அடைந்ததும், வழக்கமான பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும் தேங்கிய குப்பையை, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். இன்று காலை 10:00 மணிக்கு, அம்மன் தேரோட்டம் நடக்கிறது.