பதிவு செய்த நாள்
31
ஆக
2011
11:08
மார்த்தாண்டம் : ஓண பண்டிகையை கொண்டாட கேரளாவுடன் குமரி மாவட்ட மக்களும் தயாராகி வருகின்றனர். வரும் 9ம் தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களின் முக்கியமான பண்டிகை ஓணம். கன்னியாகுமரி மாவட்ட மக்களும் ஓணப்பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். கேரளா மற்றும் குமரி மாவட்ட மக்கள் வசந்தகால விழாவாக திருவோணத்தை கொண்டாடுகின்றனர். மலையாள கொல்லம் ஆண்டில் முதல் மாதம் சிங்ஙம் தமிழகத்தில் ஆவணி மாதம் ஓணம் கொண்டாடப்படுகிறது. அத்தம் பிறந்ததும் ஓணத்தை கொண்டாட பொதுமக்கள் தயாராராகுகின்றனர். அத்தம் நட்சத்திரத்தில் இருந்து பத்தாவது நாள் திருவோணம் நட்சத்திரம். "அத்தம் பத்தினு பொன்னோணம் என்று கேரள மக்கள் மகிழ்ச்சியாக கூறுவார்கள். ஓண பண்டிகையை 10 நாட்களும் விதவிதமான பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, புத்தாடை அணிந்து, விதவிதமான உணவு பதார்த்தங்களுடன், உற்சாகமான ஊஞ்சலாட்டம், ஓணப்பந்து, படகு போட்டி என்று பல்வேறு விளையாட்டுகளுடன் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். பத்து நாட்களும் பிறவற்றை மறந்து ஓண கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பண்டைகாலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் வரும் கோடை விடுமுறையில் வெளியூர்களில் வசிப்பவர்கள், வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊர் வந்து உறவினர்களை சந்தித்து சந்தோஷமாக பொழுதை கழிப்பார்கள். ஆனால் கேரளாவில் ஓணம் குடும்ப உறவை பலப்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஓணப்பண்டிகையை முன்னிட்டு உலகின் பல பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊர் வருவார்கள். வெளியூரில் வசிக்கும் உறவினர்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டால் ஓணத்திற்கு சொந்த ஊர் வருவதாக கூறுகின்றனர். அந்த அளவிற்கு ஓண கொண்டாட்டம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இந்த ஆண்டு அத்தம் நட்சத்திரம் இன்று பிறக்கிறது. இதனால் இன்று முதல் வீடுகள், கோயில்கள், கிளப்புகளில் அத்தப்பூ கோலம் போடும் நிகழ்ச்சி துவங்கும். திருவோணம் வரை தினசரி விதவிமாக பூக்களால் கோலம் போடுவார்கள். இதற்காக கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகி வருகிறார்கள். மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி, மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, மேல்பாலை ஹோலி டிரினிட்டி கல்வியியல் கல்லூரி உட்பட பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் அத்தப்பூ கோலப்போட்டி அடுத்த வாரம் நடக்க உள்ளது. இதை போல் கிராம பகுதிகளில் சிறுவர்கள் வீட்டின் முன் உள்ள மரங்களில் ஊஞ்சல் கட்டி வருகின்றனர். குழித்துறை, நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் திருவோணம் அன்று மாவேலி ஊர்வலம், நித்திரவிளை அருகே படகுப்போட்டி நடக்கிறது. திருவோணத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் பகுதியில் வியாபாரம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. தோவாளையில் இருந்து அதிகமான பூக்கள் வாகனங்களில் மார்த்தாண்டம், குழித்துறை வழியாக கேரளா சென்ற வண்ணம் உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக ஏற துவங்கியுள்ளது. இதை போல் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் இருந்து டெம்போக்களில் காய்கறிகளும் திருவனந்தபுரம், காரக்கோணம், வெள்ளறடை, பனச்சமூடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பலசரங்கு கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் காய்கறி விலையில் பெருமளவில் மாற்றம் ஏற்படவில்லை. அடுத்த வாரம் விலை ஏறலாம் என்று மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடு, வெளியூர் மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் வந்த வண்ணம் உள்ளனர். வெளியூர்களில் இருந்து திருவனந்தபுரம் வரும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதைபோல் திருவனந்தபுரத்தில் இருந்து 10 தேதிக்கு பிறகு உள்ள அனைத்து ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. மொத்தத்தில் திருவோணத்தை கொண்டாட கேரளா மற்றும் குமரி மாவட்ட மக்கள் தயாராகி விட்டனர்.