பதிவு செய்த நாள்
23
ஏப்
2016
12:04
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே, பாலமலை ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்த்திருவிழா நடக்கும். இந்தாண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனங்களில் ரங்கநாதசுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, செங்கோதையம்மன் அழைப்பு, திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு யானை வாகன உற்சவம், தொடர்ந்து சின்னத்தேர் உற்சவம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. கோவில் முன்புறம் இருந்து புறப்பட்ட தேர், கோவிலை சுற்றி வலம் வந்து மீண்டும் கோவில் முன்புறம் நிலைகொண்டது. இதில், படுகரின மக்களின் நடனம், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம் நடந்தது. இன்று சேஷ வாகன உற்சவம், தெற்போற்சவம் நடக்கிறது. நாளை சந்தான சேவை சாற்றுமுறை தீர்த்தவாரி நடக்கிறது.