பதிவு செய்த நாள்
27
ஏப்
2016
12:04
பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில் விருதுநகர் மாவட்டம் முடுக்கங்குளத்தில் உள்ளது. அரசியல்வாதிகள் இங்கு வழிபட, சிறந்த எதிர்காலம் உருவாகும்.
ராவணன் மனைவி மண்டோதரி. இவள் கன்னியாக இருந்தபோது, திருமணத்தடை நீங்க அசுரகுரு சுக்ராச்சாரியாரை நாடினாள். தென்பாண்டி நாட்டிலுள்ள முடுக்கங்குளத்தில் (நெருக்கமாக தாமரைகளைக் கொண்ட குளம்) இருக்கும் அம்பலவாணர் என்னும் நாமம் தாங்கிய சிவனை பூஜிக்கும்படி கூறினார். அதன்படி, மண்டோதரிதாமரைக்குளத்தில் நீராடி சிவபூஜை செய்து வந்தாள். சிவபக்தனான ராவணனைத் திருமணம் செய்யும் பாக்கியம் பெற்றாள். சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும், சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது. முற்காலப்பாண்டியர் காலத்தில் எழுந்ததன் அடையாளமாக பாண்டியரின் மீன்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்யாண விநாயகர்: கோயில் வாசலில் வீற்றிருக்கும் விநாயகர் கல்யாண விநாயகர் என்ற அழைக்கப்படுகிறார். வடக்கு முகமாக இருக்கும் இவர் கல்யாண வரம் தருபவராக அருள்கிறார். மண்டோதரி, தனது திருமணம் சிறப்பாக நடக்க அருள் பெற்றதால் இக்கோயில் கல்யாண தலமாக விளங்குகிறது. இவ்வூரில் உள்ள மக்கள், இந்தக் கோயிலில் திருமணங்களை நடத்துகின்றனர். இங்குள்ள குளத்திற்கு சிவகாமி புஷ்கரணி என்று பெயர். இதைத் தவிர கோயிலுக்குள் சதுரமான கிணறு ஒன்றும்உள்ளது.
சூரியன் பூஜிக்கும் சிவன்: மாசி சிவராத்திரி நாளில் சூரியனின் ஒளி சுவாமி மீது படர்வது சிறப்பானது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் சுவாமி சந்நிதி எதிரில் உள்ளது. சூரியதிசை, சூரியபுத்தி நடப்பில் உள்ளவர்கள் அம்பலவாணசுவாமியை மாத சிவராத்திரி, பிரதோஷ நாளில் தரிசிப்பது நல்லது. அரசுப்பணியில் உள்ளவர்களுக்கும், அரசியல்வாழ்வில் இடைஞ்சலைக் களைந்து முன்னேற விரும்புபவர்களுக்கும் இக்கோயில் வழிபாடு நன்மை தரும். இக்கோயிலுக்கும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சுரங்கம் இருந்ததாக கூறுகின்றனர். அம்மன்சந்நிதிக்கு நேராக கோயில் கோபுரவாசலும், சுவாமி சந்நிதிக்கு நேராக பலகணியும் இருப்பது மாறுபட்ட அமைப்பாகும்.
ஆருத்ரா அபிஷேகம்: அம்பலவாண சுவாமியாக மூலவர் திகழ்வதால் மார்கழியில் திருவெம்பாவை வழிபாடு சிறப்பாக நடத்துகின்றனர். சுவாமி சந்நிதியில் நடராஜர், சிவகாமி அம்மன் வீற்றிருக்கின்றனர். பதஞ்சலி,வியாக்ரபாதர் உடனிருக் கின்றனர். ஆருத்ராநாளில் நடராஜருக்கு அபிஷேகமும், அலங்காரமும் செய்து வழிபடுகின்றனர். கன்னிமூலை கணபதி இங்கு தலவிநாயகர்.