பழநி கோயில் பள்ளியறையில், முருகப்பெருமானின் திருப்பாதங்கள் தொட்டில் போன்ற ஊஞ்சலில் இருத்தப்படும். குழந்தைகளைத் தூங்கவைப்பது போன்று, முருகனையும் தொட்டிலில் கிடத்துவதாக நம்பிக்கை. அதன்பிறகு, ஓதுவார் தாலாட்டுப் பாட பள்ளியறைக் கதவுகள் மூடப்படும். பழநி மலையில் வடக்குப்புறத்தில் உள்ள மண்டபத்தில் விஸ்வரூப காட்சி தரும் முருகனைத் தரிசிக்கலாம். கேரளாவில் ஆலப்புழைக்கு அருகில் உள்ள ஹரிபாத் எனும் இடத்தில், பாலமுருகனாகவும்; வைக்கம் அருகே உதயணபுரத்தில் பேரழகு தோற்றம் கொண்ட வாலிபனாகவும்; திருவனந்தபுரம் அருகே தைக்காட்டில் ஆண்டிக் கோலத்திலும் அருள்புரிகிறார் முருகப்பெருமான். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் கல்யாண சுப்ரமணியர், கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார். இலங்கையில் உள்ள நல்லூர் திருத்தலத்தில், கருவறையில் முருகனின் வேலாயுதம் மட்டுமே அருள்பாலிக்கிறது. வலது திருப்பாதத்தில் பாதக்குறடு துலங்க, இடது திருப்பாதத்தை மயிலின் முதுகில் வைத்தபடி, அழகுக்கோலம் காட்டும் முருகப்பெருமானை சீர்காழிக்கு அருகில் உள்ள திருமயிலாடியில் தரிசிக்கலாம். கோவை - பூராண்டாம்பாளையம் எனும் ஊரில் பஞ்சவேல்களே முருகனாக வழிபடப்படுகிறார்கள்.