பதிவு செய்த நாள்
03
மே
2016
02:05
பல வருடங்களில் சித்திரை மாதத்திலும், சில வருடங்களில் வைகாசி மாதத்திலும் வருகின்ற அட்சய திரிதியை ஒரு சிறப்பான நன்னாள். சித்திரை மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகிற வருடங்களில், இரண்டாவது அமாவாசையைத் தொடர்ந்து வரும் வளர்பிறை மூன்றாம் நாள் வைகாசி மாதத்தில் வருகிறது. அதுவே அவ்வருடத்திற்குரிய அட்சய திரிதியையாக ஏற்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. மகாகவி காளிதாசரின் உத்தர காலாமிர்தம் என்ற நூல் திதிகளில் சிறந்தது த்ருதியை என்கிறது. எல்லாத் த்ருதியைகளுமே சிறப்புடையதாக இருக்கையில் அட்சய திரிதியையின் பெருமையைச் சொல்லவா வேண்டும்? வடமொழியில் க்ஷயம் என்றால் தேய்தல் என்றும் அக்ஷயம் என்றால் தேய்வின்றி வளர்தல் என்றும் பொருள்.
திருமகளைத் தனது இதயக் கமலத்தில் ஏற்றுக்கொண்டதன் மூலம் திருமால் என்ற திருநாமத்தை மகாவிஷ்ணு பெற்ற நாள் அட்சய திரிதியை. அட்சயம் என்று திருமால் கைகாட்டும் இடத்தில் திருமகள் புகுந்து அருள்பாலிப்பதால்தான், அவர் அருளைப் பெறும் பொருட்டு இந்நாளில் லட்சுமி நாராயண பூஜையுடன் குபேர பூஜையும் செய்யப்பட்டு வருகின்றது. சிற்றெறும்பு முதல் குஞ்சரக் கூட்டம் வரை கோடானுகோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் காத்து வரும் பரமேஸ்வரனின் பணியில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என்று பரமேஸ்வரி இறைவனை வேண்டி அட்சய பாத்திரம் பெற்று, அண்டியவர்களுக்கு அன்னமிட்டு அன்னபூரணியான நாளும் இதுவே. இறைவன் பிட்சாடனர் வேடத்தில் அன்னபூரணியிடம் பிக்ஷை ஏற்ற நாளும் இதுவே.
சதா ஐஸ்வர்யம் பொங்குகின்ற சங்கநிதி, பதுமநிதி என்ற இரு மங்கலக் கலசங்களை பரமேஸ்வரனிடமிருந்து குபேரன் பெற்ற நாளும் இதுவே. சங்க நிதியில் வலம்புரிச் சங்கும், பதுமநிதியில் தாமரையும் இருக்கும். இவை முறையே செல்வத்தையும் கல்வியையும் குறிப்பவை. இவ்விரண்டும் இணைந்திருக்க வேண்டுமென்பது குபேர தத்துவம். சாபத்தால் தேயும் நிலையை அடைந்த சந்திரனின் நோய் இறையருளால் நீங்கப் பெற்ற நாளும் இதுவே. அஞ்ஞாதவாச காலத்தில் பாண்டவர்கள் ஒரு வன்னிமரப் பொந்தில் வைத்துப் பாதுகாத்த தங்கள் ஆயுதங்களை, அட்சய திரிதியை நாளில்தான் எடுத்து, போரில் கவுரவர்களை வென்றார்கள்.
பெருங்காவியமான மகாபாரதத்தை வியாசர் சொல்ல, யானைமுகத்தான் எழுதத் தொடங்கியதும், பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் இந்த நாளில்தான். ஆதிசங்கரர் சன்னியாசியாக பிச்சை கேட்டு தர்மசீலை என்ற நங்கை நல்லாளின் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக கனகதாரா ஸ்தோத்ரம் பாடியது இந்த நாளிலேயே. தாவரங்களுக்கு அதிபதியான சாகம்பரீதேவி பல அரிய மருத்துவ மூலிகைகளை உருவாக்கித் தந்ததும் அட்சய திரிதியை நாளில்தான். அன்றைய தினம் நெல்லிமரத்தை வீட்டின்முன் நடுவது நல்லது. விஷ்ணு அம்சமான நெல்லிமரத்தில் திருமகள் வாசம் செய்வதாக ஐதீகம்.
நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையற்றதாக இருக்கும். அவ்விடத்தில் அருள் நிறைந்திருக்கும். எவ்விதத் தீய சக்தியும் அணுகாது. நெல்லிக் கனியைச் சாப்பிட்டால் பார்வைக்குறைவு, இளநரை போன்ற குறைபாடுகள் கட்டுப்படும். முதுமையான வடிவம் கொண்டிருந்த சியவன முனிவர் துவாதசி திதியன்று நெல்லிக் கனியை உண்டு இளமையைப் பெற்றதாகக் கூறுவர். இதனால் தான் நெல்லிக்காய் லேகியத்திற்கு சியவன பிராசம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. ஆந்திர கர்நாடக மாநிலங்களில் ஒரு பகுதியை விஜயரகுநாத நாயக்கர் ஆண்டு வந்தபோது கடும்பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அவரது அமைச்சர் ராகவேந்திரரைப் பற்றி மன்னரிடம் எடுத்துக்கூறி அவருடைய அனுமதி பெற்று அவரை அழைத்து வந்தார்.
அங்கு வந்ததும் ராகவேந்திரர் தரையில் நெல்லைப் பரப்பி அதில் அட்சய என எழுதியதும் 10 வருடங்களாகப் பெய்யாதிருந்த மழை இரவு பகலாகக் கொட்டித் தீர்த்தது. வடஇந்தியாவில் இந்நாளை அகஜித் எனக் குறிப்பிடுகின்றனர். சமணர்கள் இந்நாளில் உண்ணா நோன்பிருந்து மாலையில் கரும்புச்சாறு பருகி நிறைவு செய்தால் வருடம் முழுவதும் கரும்பு போன்று அவர்களுடைய வாழ்வு இனிக்குமென்று நம்புகின்றனர். இதற்கு ஒரு கதையும் கூறப்படுகிறது. அதாவது செல்வந்தரான ஆதிநாதர் என்ற ரிஷபதேவர் தனது செல்வம் முழுவதையும் பிறருக்குக் கொடுத்துவிட்டு சமண மதத்தின் முதலாவது தீர்த்தங்கரரானார்.
பசியைக் கூடப் பிறரிடம் கூறாத பண்பாளராக அவர் இருந்து வந்தார். அவர் ஒரு மகான் என்பதைப் புரிந்து கொண்ட மக்கள் அவருக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகத் தர முன்வந்த போதிலும் அவருடைய பசியைப் போக்குவதற்குத் தேவையான உணவைத் தரத்தவறினர். எனவே ஆதிநாதர் ஒரு முடிவுக்கு வந்தவராக உண்ணாவிரதத்தில் அமர்ந்து விட்டார். ஒரு வருடம் சென்றது. அவரைக் காணவந்த அவரது பேரன் (ஸ்ரேயன்ன குமாரர்) தனது தாத்தா பசியுடன் இருப்பதைப் புரிந்து கொண்டு அவருக்கு ஒரு கோப்பை கரும்புச் சாற்றைக் கொடுத்தான். அதை அருந்திய ஆதிநாதர் தன் விரதத்தை முடித்துக் கொண்டார். அது அட்சய திரிதியை. எனவே அந்த நாளில் சமணர்கள் தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக அட்சய திரிதியையன்று ஒரு குண்டுமணியளவாவது தங்கம் வாங்குவது சிறப்பு என்ற ஒரு மாயை, ஊடகங்களாலும், பொன் நகை வியாபாரிகளாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சாஸ்திர அடிப்படை எதுவுமே இல்லை என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உண்மையில் அன்றைய தினம் அரிசி, உப்பு, தானியங்கள், பால், தயிர், நீர்மோர், பானகம், விசிறி, செருப்பு, குடை, பசு, பூமி ஆகியவற்றுடன் தங்கமும் தானம் செய்வதே சிறப்பு.
அட்சய திரிதியை அன்றே தேவதைகள் ஈசனுக்குரிய பூஜை புனஸ்காரங்கள் செய்து அளப்பரிய சக்தி பெற்றனர். எனவே பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதற்கு இது சிறந்த நாள் எனப் பெரியோர்கள் கூறியுள்ளனர். அன்று சூரிய ஒளி கூடுதலாக இருப்பதால் அன்று செய்யும் பித்ரு பூஜை பெற்றோர்களை மட்டுமின்றி முந்தைய தலைமுறையினரையும் சென்றடையும் என்பதும், அவர்கள் அகமகிழ்ந்து தம்மை மறக்காத வாரிசுகளுக்குத் தமது அருளை வாரி வழங்குவர் என்பதும் நம்பிக்கை.
பொதுவாக அட்சய திரிதியையன்று சூரியன் மேஷத்திலும், சந்திரன் ரிஷபத்திலும் உச்சமடைந்திருப்பர். சூரியன் தந்தைக்கும் சந்திரன் தாய்க்கும் அதிபதி. எனவே அன்று தாய் தந்தையரை வணங்கி அவர்களின் ஆசி பெறுவது சிறப்பு.
அட்சய திரிதியையன்று செய்யப்படும் தானம் சிறப்புடையது. பழங்கள் தானம் செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். நீர்மோர், பானகம் தானம் செய்பவர்களின் உடல்பிணி நீங்கும். தயிர்சாதம் தானம் செய்தால் பாவங்கள் போகும். சுமங்கலிப் பெண்கள் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் மங்கலப் பொருட்கள் அவர்களை தீர்க்க சுமங்கலிகளாக வாழவைக்கும். எனவேதான் இந்நாள் தானத்திருநாள் என்று அழைக்கப்படுகிறது. ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி, ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி, அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை நடத்தி வரும் அமைப்புகளுக்கு உதவுதல் போன்ற பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அட்சய திரிதியையை நாம் கொண்டாடி மகிழ்வோமாக.
அட்சய திரிதியைக்கு செல்ல வேண்டிய கோயில்கள்:
அருள்மிகு திருக்காலடியப்பன் திருக்கோயில், எர்ணாகுளம், கேரளா
அருள்மிகு மகாலட்சுமி குபேரன் திருக்கோயில், விழுப்புரம்
அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில், சென்னை