பதிவு செய்த நாள்
03
மே
2016
03:05
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்கி மே 25ம்தேதி முடிகிறது.
முன்னொரு காலத்தில் சுவேதகி யாகத்தில் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாமல் நெய் ஊற்றி யாகம் செய் தனர். தொடர்ந்து அக்னி தேவன் அந்த யாக நெய்யை உண்டதால் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருந்து காண்டவ காட்டை அழித்து உண்பதுதான் என்று ஆலோசனை கூறப்பட, காண்டவ வனத்தை நோக்கிச் சென்றான் அக்னிதேவன். அதனை அறிந்து அக்காட்டில் வசித்த உயிரின ங்கள், தாவரங்கள் அனைத்தும் வருணனிடம் உதவி வேண்டின. எனவே வருணன் இடைவிடாது மழை பெய்தான். அதனால் அக்னியால் காட்டை அழிக்க முடியவில்லை. எனவே அக்னி தேவன் திருமாலிடம் உதவி வேண்டினான். திருமால், அர்ச்சுனனிடம் அக்னிக்கு உதவச் சொன்னார். அர்ச்சுனன் தன் கணைகளால் அந்தக் காட்டை மறைத்து சரக்கூடுகட்டி தீ அணையாது எரிய உதவினான். அப்போது திருமால் அக்னிக்கு ஒரு நிபந் தனை விதித்தார். உனக்கு இருபத்தோரு நாட்கள் அவகாசம் தருகிறேன். அதன்பின் நீ காட்டை அழிக்கக் கூடாது என்றார். எனவே அக்னி 7 நாட்கள் மெதுவாக எரிந்து பின் 7 நாட்கள் வேகமாக எரிந்து கடைசி 7 நாட்கள் வேகம் குறைந்து உண்டபின் திரும்பினான். அதுவே அக்னி நட்சத்திர காலம் என புராணக்கதை கூறுகிறது.
அக்னி நட்சத்திரம் அசத்தி எடுக்கும் : அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று வியர்த்து வழிவதில் ஆரம்பித்து அப்பாடா என்று களைத்து அமர்வதில் இது முடியும். இப்படி அசத்தி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்களுக்கும், புராணத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? அக்னி நட்சத்திர நாளில் சந்திரனும் பூமியும் சூரியனுக்கு சற்று அருகே இருப்பதால்தான் இந்த நிலை என்கிறது விஞ்ஞானம். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி தேவன். இது நெருப்பைக் கக்கும் நட்சத்திரம் எனவே இதை அக்னி நட்சத்திரம் என்பர்.
அக்னி நட்சத்திரம் தோன்றிய கதை: சூரியனின் ஆற்றல் அக்னி என்று ரிக்வேதம் சொல்கிறது. பல காலம் முன்பாக அக்னி பகவான் தாளாத பசியாலும் வயிற்று வலியாலும் துடித்தார். அவரது அந்த நிலைக்கு என்ன காரணம் என்று யாராலும் கண்டறிய முடியவில்லை. நீண்ட நாட்கள் அவ்வாறே தவித்தவருக்கு இறுதியில் பிரம்மதேவர் மூலமாகக் காரணம் தெரிய வந்தது. சுவேதகி என்ற மன்னன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் யாகம் வளர்த்து அதில் நெய் உள்ளிட்ட ஏராளமான ஆகுதிகளை அக்னியில் இட்டு வந்தான். அவற்றைத் தொடர்ந்து உண்டதால்தான் அக்னிக்கு அஜீரணம் ஏற்பட்டு வயிறு உபாதை ஏற்பட்டது என்பது தெரிந்தது. அதைப் போக்க என்ன வழி என்று கேட்டார், அக்னி. மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை அப்படியே தின்றால் அவரது ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும் என்றார், பிரம்மா. ஏற்றதொரு வனத்தைத் தேடினார், அக்னி. அப்போது, காண்டவ வனம் என்னும் அடவி, அதற்கு உரிய வகையில் இருப்பதை அறிந்தார். அந்த வனம், இந்திரனுக்கு மிகவும் பிடித்தமானது. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய்வித்து அக்னியை அடக்கினான். பலமுறை முயன்றும் அதே நிலை நீடித்தது.
என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார், அக்னிதேவன். கிருஷ்ணாவதார காலகட்டம். பகவான் அர்ஜுனனோடு பாண்டவர்களுக்கான தலைநகரைத் தேடிக் கொண்டிருந்தார். ஒரு சமயம் கிருஷ்ணர், அர்ஜுனனோடு காண்டவ வனம் இருந்த பக்கமாக வந்தபோது, அக்னி பகவான் கிருஷ்ணரைக் கண்டு வலம் வந்து துதித்தார். தனது நிலையைக் கூறி வருந்தினார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். ராஜ தந்திரியான கிருஷ்ணர், அர்ஜுனனை அர்த்தத்தோடு பார்த்தார். உடனே குறிப்பறிந்த அர்ஜுனன், பகவானே! இந்திரனின் மழை இந்த வனத்தின் மேல் விழாதபடி சரக்கூடம் அமைத்துக் காத்திட என்னால் முடியும். ஆனால் அதற்கு சிறப்பான வில்லும், குறையவே குறையாத அம்புறாத்தூணியும் வேண்டுமே என்றான். அக்னி பகவானும் மிகச் சிறப்புகள் வாய்ந்த வில்லான காண்டீபத்தையும், எவ்வளவு எடுத்தாலும் குறையாத அம்புறாத்தூணியையும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணர், காண்டவ வனத்தைப் புசிக்கும்படி அக்னி பகவானிடம் கூறினார். வழக்கம்போல இந்திரன் மழையைப் பொழியச் செய்ய, அதே நேரம் அர்ஜுனனை சரக்கூடம் அமைத்திடச் சொன்னார், கிருஷ்ணர். இடையுறாது அம்புகளைச் செலுத்தி அவற்றை அந்தரத்திலேயே இணைத்துக் கூரைபோலாக்கி, வனத்தின் மேற்பகுதியினை மூடி ஒரு துளி மழை நீரும் உள்ளே விழாதபடி செய்தான் அர்ஜுனன். எவ்வளவோ பெருமழையைக் கொட்டியும் சரக்கூடத்தை சிறிதும் சிதைக்க முடியாமல் போகவே செய்வதறியாமல் தவித்த இந்திரன், பூமிக்கு வந்து கண்ணபிரானிடம் முறையிட்டார். கண்ணா! அக்னி பகவான் வளம் முழுவதையும் எரித்தால், இதில் வாழும் உயிர்களின் நிலை என்ன? ஒருவேளை இந்த வனத்தைப் புசித்தும் அவரது பசி அடங்காவிட்டால் என்ன ஆகும்? வேறு காடுகளைத் தேடிப் புசிக்க ஆரம்பித்து விடுவாரே? அப்படியானால் என் நிலை என்ன? என்று வேண்டினார்.
அனைத்தையும் கேட்ட பரந்தாமன், அக்னி பகவானுக்கு ஒரு கட்டளை இட்டார். அக்னியே! எண்ணி இருபத்தோரு நாட்கள் மட்டுமே நீ காண்டவ வனத்தைப் புசிக்கலாம். அதன்பிறகு உன் வயிற்றுவலியும் தீர்ந்து விடும். அதன் பின்னர், அர்ஜுனனின் சரக்கூடம் கலைந்துவிடும். பூமியைக் குளிர்விக்க இந்திரன் வருவான். அப்போது நீ இடைஞ்சல் செய்யக்கூடாது! என்றார். அப்படியே செய்வதாக அக்னியும் வாக்களித்தார். அக்னி பகவான் தனது ஏழு நாக்குகளால் முதல் ஏழு நாட்கள் பூமிக்கு அடியில் இருந்த வேர்களையும் பூச்சிகளையும் புசித்தார். அடுத்த ஏழு நாட்களில் மேலே இருந்த மரங்கள், செடிகள் ஆகியவற்றை உண்டார். கடைசி ஏழு நாட்கள் அங்கிருந்த பாறைகளை விழுங்கினார் என்கின்றன புராணங்கள். காண்டவ வனத்தை அக்னி புசித்த அந்த இருபத்தொரு நாட்கள்தான் அக்னி நட்சத்திர காலம். பின்னாட்களில் இந்தக் கணக்கில் முன்கத்திரி, பின் கத்திரி என்று சில நாட்களை சேர்த்துக் கூறுவது எப்படியோ வழக்கமாகிவிட்டது. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த முதல் ஏழு நாட்கள் வெப்பம் சற்றே குறைவாகவும், அடுத்த ஏழு நாட்கள் மிக மிக அதிகமாகவும், கடைசி ஏழு நாட்கள் மீண்டும் மிதமாகவும் இருக்கும். அதே போல அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பு இந்திரன் பூமியைக் குளிர்விக்க மழையை பொழிவிப்பான் என்றும் சொல்கிறார்கள். கோடை மழை பெய்வது அதனால்தான்.
ஆறுதல் பெற ஆண்டவனை கும்பிடுங்க: அக்னி நட்சத்திர காலத்தில் அதிகாலை துயிலெழுந்து நீராடியபின் சூரிய பூஜையும், சூரிய நமஸ்காரமும் செய்வது சிறந்தது. முருகனையும், மீனாட்சியையும் வழிபடுவதுடன், பரணிக்குரிய துர்க்கையையும், ரேவதிக்கு உரிய பிரம்மனையும், கிருத்திகைக்கு உரிய அக்னியையும் வழிபாடு செய்வதும் நல்லது.
தாகம் தீர்க்க தானம் பண்ணுங்க: குடை, விசிறி, காலணிகள் தானம் செய்யலாம். அத்துடன் அன்னதானமும் ஆடைதானமும் செய்வது நல்லது. தண்ணீர்ப் பந்தல் அமைத்து தண்ணீர், நீர்மோர் போன்றவத்தைத் தருவது நற்பலன் தரும். அக்னி நட்சத்திர நாட்களில் நோய்கள் பல பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. அக்னிக் காற்று நோய் பரப்பும் தன்மை கொண்டது. அதனால் தினமும் குடத்தில் நீர் நிரப்பி மஞ்சள் கரைத்த அதனை வேப்பிலைக் கொத்துகளால் நனைத்து வீடு முழுதும் தெளிக்கலாம். நரசிம்மரை வழிபட்டு தயிர்சாதம், நீர்மோர், பானகம் படைத்து தானம் செய்யலாம். விஷ்ணு நாமத்தை 108 முறை ஜபிக்கலாம். சீதளா தேவி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.
எளிய எல்லோராலும் இயன்ற வழி, இக்காலத்தில் அகமும் புறமும் தூய்மையுடன் இருப்பதும், பிறர் மனம் குளிரும் வண்ணம் நடப்பதும், இயன்ற அளவில் தருமம் செய்வதும், மனம் உருகி இறைவனை வழிபடுவதும், கடவுள் அருள் மழையில் நம்மை நனைக்கும் என்பது நிச்சயம். இறைவன் கருணை மழையில் நனைந்து விட்டால் கத்திரி வெயிலும் நம்மை வாட்டாது குளிரும் வாழ்வும் மலரும்.