ஓட்டேரி:ரத்தினமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரர் கோவிலில் நேற்று, அட்சய திரிதியை ஒட்டி, மூலவர், சொர்ண அலங்காரத்தில் அருள்பாலித்தார். வண்டலுாரை அடுத்த, ரத்தினமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரர் கோவிலில், ஆண்டுதோறும் அட்சய திரிதியை வழிபாடு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டும் அட்சய திரிதியை வழிபாடு நேற்று நடைபெற்றது.இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு, லட்சுமி குபேரர் யாகம் நடத்தப்பட்டு, விஸ்வரூப தரிசனத்துடன் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கனகதாரா ஸ்தோத்திரம் நாள் முழுவதும் படிக்கப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் நெல்லிக்கனி பிரசாதம் வழங்கப்பட்டது. லட்சுமி குபேரர் சொர்ண அலங்காரத்தில் அருள் பாலித்தார்.