பதிவு செய்த நாள்
10
மே
2016
03:05
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மிகப்பெரும் சகாப்தத்தை படைத்த கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் தனது ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவின் கிரேக்க நாடு முதல் தொடங்கி ஆசியக் கண்டத்தின் இந்திய எல்லை துவக்கம் வரை உள்ள ஏராளமான ராஜ்யங்களை தன் கையகப்படுத்தியிருந்தார். இதனாலேயே இவர் அலெக்சாண்டர் தி கிரேட் என்று புகழப்பட்டார். உலகமே புகழும் மன்னராக இருந்த போதிலும், இந்தியாவில் இவர் நுழைந்த போது, ஒரு சாதுவின் மூலம் மிகப்பெரிய படிப்பினை பெற்றார். சுருக்கமாக சாம்ராஜ்யம் படைத்த அலெக்சாண்டரை, அந்த சாது வென்று விட்டார். என்றே கூறலாம். தனது வீரர்கள் பலருடன், ஒரு கிராமத்தை கடந்த அலெக்சாண்டர், வழியில் ஒரு சாதுவை சந்தித்தார். அந்த சாது ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பார்ப்பதற்கு மெலிந்த தோற்றமும், மிக ஏழ்மையான நிலையில் இருப்பதை போல் காட்சி அளித்தார்.
அவரது சாந்தமான தோற்றத்தையும், ஏழ்மை நிலையையும் பார்த்த அலெக்சாண்டர் அவர் அருகில் சென்று கேட்டார். ஐயா! தங்களுக்கு எதுவும் தேவைப்படுகிறதா? சாதுவோ, எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். இதனால் அலெக்சாண்டர் மீண்டும் ஒருமுறை அந்த சாதுவிடம் கேட்டார். ஐயா! தங்களுக்கு எதுவும் தேவைப்படுகிறதா? தாராளமாக கேளுங்கள். என்னால் நிச்சயம் உங்களுக்கு வழங்க முடியும். தங்களுக்கு உதவ வேண்டும் என்று மனம் விரும்புகிறது என்று பணிவுடன் விண்ணபித்தார். ஆனால் சாதுவோ அதே போல் சற்று நேரம் அமைதி காத்தார். அலெக்சாண்டருக்கு சற்று வருத்தம் மேலிட்டது. இருப்பினும் சாதுவின் பதிலுக்காக பொறுமையுடன் காத்திருந்தார். சில நிமிடங்கள் நிசப்தத்திற்கு பின் சாது லேசாக வாயசைத்தார். தாராள குணம் மிக்கவரே! தங்களின் விருப்பத்திற்கு நன்றி, தற்சமயம் எனக்கு எதுவும் தேவைப்படவில்லை என்று கூறினார். சாது இப்படி பேச ஆரம்பித்ததும் அலெக்சாண்டர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். இருப்பினும் அவரது மனம் எப்படியாவது அந்த சாதுவிற்கு உதவ வேண்டும். அவர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளார் என்று எண்ணினார். அதனால் மீண்டும் ஒரு முறை சாதுவிடம் வற்புறுத்தி கேட்டார். ஐயா. ஏதாவது ஒரு வகையில் தங்களுக்கு உதவி செய்ய விரும்புகிறேன். தயவு செய்து எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்று கூறினார்.
சாதுவோ, தாங்கள் சற்று தள்ளி நின்றால் போதும், சூரியவெளிச்சம் எனக்கு முழுமையாக கிடைக்கும் என்றார். அவ்வளவு தான் அலெக்சாண்டர், அவரது பதிலால் அதிர்ந்து விட்டார். தன் நிலையில் திருப்தி அடைந்த அவரை வணங்கி விட்டு ஆழ்ந்த சிந்தனையுடன் அவ்விடம் விட்டு அகன்றார். அதாவது உலகத்தையே வென்றும் தனக்கு இன்னும் திருப்தி அடைந்தது போல் உணரவில்லை. ஆனால் இந்த சாது எதுவுமே இல்லாமல், எவ்வளவு திருப்தியாக உள்ளார் என்று ஆச்சர்யப்பட்டார். உண்மையில் அலெக்சாண்டர். சாதுவிற்கு நிறைய பொருள் உதவி வழங்க வேண்டும். என்று விரும்பினார். ஆனால் சாதுவோ, தெய்வ சிந்தனையில் நிலைத்திருந்தால், நிலையில்லா இவ்வுலக சுகபோகங்களுக்காக ஏக்கப்படாமல் இருந்தார். மாறாக, இறை உணர்வு எனும் நிலைத்த செல்வத்தில் அவர் திருப்தி உடையவராக இருந்தார். இது தொடர்பாக ஸ்ரீல பிரபுபாதா தனது உரைகளின் பல இடங்களில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். பவுதீக ரீதியாக நாம் ஏழ்மையில் இருக்கலாம். ஆனால் நாம் ஆன்மிக ரீதியாக முன்னேறி இருந்தோம். என்றால், ஒரு ஏழை மனிதன் தன்னுடைய ஏழ்மையை உணர்வதில்லை. பகவத்கீதையிலும் (6.20-23) கூட கிருஷ்ணர் கூறுகிறார்.
யம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் தத:
யஸ்மின் ஸ்திதோ ந துஹ்கேன குருனாபி விசால்யதே
ஆன்மீகத்தின் பரிபக்குவ நிலை அடைந்த ஒருவர், இதை விட உயர்ந்த இலாபம் ஏதுவுமில்லை என்று உறுதியாக கருதுகிறார். எனவே அவர், மாபெரும் துயரங்களுக்கு மத்தியிலும் ஒரு போதும் அசைக்கப் படுவதில்லை. இதுதான் ஆன்மீகம், என்னிடம் பணம் இருக்கும் வரையில் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று கருதுவது தவறானதாகும். என்னிடமே பணம் இல்லை என்றாலும் கூட நான் சந்தோஷமாக இருக்க முடியும். இதுதான் ஆன்மீகம். இது எப்படி சாத்தியமாகும்? ஒருவர் கிருஷ்ண உணர்வில் இருந்தால் இது சாத்தியமாகும். துருவ மகாராஜாவைப் போல்! அவர் கிருஷ்ணரிடம் இருந்து ஒரு மிகப்பெரிய ராஜ்யத்தை பெற வேண்டும் என்று விரும்பி காட்டிற்குச் சென்றார். ஆனால் அவர் கிருஷ்ணரின் தரிசனம் பெற்றவுடன் அவர் கூறினார். ஸ்வாமின் க்ருதார்தோ அஸ்மிவரம் ந யாசே எனக்கு எந்த வரமும் வேண்டாம் என்றார். இதுவே ஆன்மீகப் பண்பு. என்னிடம் பணம் இருக்கும் வரையில் சந்தோஷமாக இருப்பேன் என்பது ஒரு மனிதனுக்குரிய பண்பல்ல, அது விலங்குகளின் கலாச்சாரம்.
மேலும் பிரபுபாதா இது பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். நீங்கள் தண்ணீரைத் தேடிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் பசிபிக் கடலிற்கு சென்றால், அங்குள்ள் எல்லையில்லா தண்ணீரால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள். அது போலவே உங்களுக்கு ஏதாவது தேவை என்றால், நீங்கள் கிருஷ்ணரை அணுகினீர்கள் என்றால், நீங்கள் கடல் போல் எல்லையற்றதை அடையலாம். அப்போது அவர் கூறுவார். எனக்கு எந்த ஏக்கமும் கிடையாது. நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுள்ளேன். அடுத்ததாக குருனாபி துஹ்கேன ந விசால்யதே அவர் மிகப் பெரிய துன்பத்தைச் சந்தித்தாலும் அதனால் பாதிக்கப்படுவதில்லை. இது சம்பந்தமாக பல நிகழ்ச்சிகளை ஸ்ரீமத் பாகவதத்தில் காணலாம். பாண்டவர்கள் மிகத் துயரமான நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் அதனால் பாதிப்படையவே இல்லை. அவர்கள் கிருஷ்ணரிடம் ஒரு போதும் கிருஷ்ணா! நீ எங்களின் நண்பன், எதற்காக நாங்கள் இவ்வளவு துயரப்படுகிறோம்? என்று கேட்கவே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு கிருஷ்ணர் மேல் முழுநம்பிக்கை இருந்தது. இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்; அதுவே போதும் என்று. இதுவே நம்பிக்கை இதுவே சரணாகதி.
கிருஷ்ணரிடம் சரணடைவதில் ஆறு விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது என்னவென்றால், கிருஷ்ணர் என்னை பாதுகாப்பார் என்று நம்பிக்கை கொள்வது. உதாரணத்திற்கு ஒரு சிறு குழந்தை தன் தாயின் மீது நம்பிக்கை வைத்துள்ளதோ அது போல, என்னுடைய அம்மா இருக்கிறார். எனக்கு எந்த பயமும் இல்லை இதுவே நம்பிக்கை. ஒரு முறை நான், எனது இரண்டு வயது மகனுடன், டிராமில் பயணம் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த டிராமின் கண்டக்டர், எனது மகனுடன் விளையாட்டாக டிக்கட் வாங்க பணம் கொடு என்று கேட்டார். அதற்கு என் மகன், என்னிடம் பணம் இல்லை என்றான். அதற்கு கண்டாக்டர், அப்படியென்றால் நீ இறங்கி விடு என்றார். உடனே என் மகன், இல்லை, இல்லை, முடியாது. நான் இறங்க மாட்டேன். என்னுடன் எனது தந்தை இருக்கிறார். இங்கே பாருங்கள் என் தந்தை என்றான். இப்படித்தான் ஒரு பக்தருடைய மன நிலையும் இருக்கும். நீங்கள் கிருஷ்ணரை அணுகினீர்கள் என்றால் பிறகு மிகப்பெரிய பயமும் உங்களைப் பாதிக்காது அது தான் உண்மை. இந்த நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும். எனவே கிருஷ்ணர் கூறுகிறார். ந மே பக்த ப்ரணஸ்யதி (பகவத்கீதை 9.31) அர்ஜூனா! என்னுடைய பக்தன் என்றுமே அழிவதில்லை. என்பதை தைரியமாக அறிவிப்பாயாக! என்கிறார்.