பதிவு செய்த நாள்
10
மே
2016
02:05
எங்கும் லிங்க வடிவில் அருள்புரியும் சிவபெருமானை பள்ளிகொண்ட கோலத்தில் சுருட்டப்பள்ளி தலத்தில் மட்டும் காணலாம். அதுபோல, யோகத்தில் அமர்ந்த நிலையிலும் நெடிதுயர்ந்து நின்ற நிலையிலும் பல தலங்களில் அருளும் அனுமனை, பள்ளிகொண்ட கோலத்தில் ஒரு தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம். அதுதான் அலகாபாத்.
உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்றிணையும் திரிவேணி சங்கமப் பகுதியில்தான் பள்ளிகொண்ட அனுமன் உள்ளார். நதிப்படுகையில் ஒரு பள்ளத்தில் அனுமன் சிலை உள்ளது. படிகளில் இறங்கிச் சென்று இவரை வழிபடலாம். ஆண்டுக்கொருமுறை கங்கை நதி பெருக்கெடுத்து, இந்த அனுமன் விக்ரகத்தை நீராட்டுகிறது. மற்ற காலங்களில் நீர் இருக்காது. இக்கோயிலை லேட்டே ஹனுமன் மந்திர், படே ஹனுமன்ஜி மந்திர் என்று சொல்கிறார்கள்.
ராமபிரான் இலங்கைப் போரில் வெற்றிகொண்டு அயோத்தி திரும்பும் வழியில், திரிவேணி சங்கமத்தில் நீராடிவிட்டு பரத்வாஜ முனிவரிடம் ஆசி பெற்றார். அதன்பின்பு அவர்கள் அங்கிருந்து புறப்படும் சமயம் ஆஞ்சனேயருக்கு உடல்நலக்குறைவு உண்டானது. அப்படியே மயங்கிவீழ்ந்து விட்டார். உயிரே பிரிந்துவிடும். நிலையிலிருந்தது. அப்போது சீதாபிராட்டி தன் நெற்றியிலிருந்த செந்தூரத்தை அனுமனின் நெற்றியிலிட, அனுமனுக்கு சுயஉணர்வு திரும்பியது. இனி எப்போதும் நீ உடல்வலிமையுடன் திகழ்வாய் என ஆசீர்வதித்தாள் சீதாபிராட்டி. இந்த நிகழ்வின் அடிப்படையில்தான் இங்கு அனுமன் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிப்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே இந்த சிலை வந்த வரலாறு: அனுமன் பக்தர் ஒருவர் ஆஞ்சனேயர் சிலை வடித்து அதை படகில் ஏற்றிக்கொண்டு நதியில் வந்துகொண்டிருந்தார். படகு இந்தப் பகுதிக்கு வந்த போது நகராமல் நின்றுவிட்டது. பின்னர் அதன் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க, இறுதியில் நதிக்குள் மூழ்கி விட்டது. அந்த அனுமன் பக்தர் இப்படியாகிவிட்டதே என்று பெரும் சோகத்திலாந்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய அனுமன், நான் இந்த இடத்திலேயே இருக்க விரும்புகிறேன். நீ வருந்தாதே. உனக்குத் துணையாக எப்போதும் நான் இருப்பேன் என்று சொன்னார். அதன்பின்னர் நீருக்குள் மூழ்கியிருந்த அனுமன் விக்ரகம் கரையொதுங்கியது. பக்தர்கள் அங்கேயே சந்நிதி அமைத்து வணங்கி வரலானார்கள்.
கி.பி. 1400-ல், மொகாலாயப் பேரரசன் ஔரங்கசீப், இந்த அனுமன் சந்நிதியை இடித்துவிட்டு, அனுமன் சிலையைப் பெயர்த்தெடுத்து வருமாறு நூறு வீரர்களை அனுப்பினார். வந்த வீரர்கள் சந்நிதியை சேதப்படுத்தி, அனுமன் விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க முனைந்தனர். ஆனால் அவரை அசைக்கக்கூட முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்து தளர்ந்து போனார்கள். இந்த நிலையில் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. செய்தியறிந்த ஔரங்கசீப் தனது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மனக்கஷ்டம், பணக்கஷ்டம், பயம் கொண்டவர்கள், இன்னும் இதுபோல பலவகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து ஆஞ்சனேயருக்கு செந்தூரம் படைத்து வழிபடுகிறார்கள். இந்த சந்நிதியிலிருந்து வேண்டிக்கொள்ளும் யாவும் நிறைவேறுகின்றன என்கிறார்கள் பக்தர்கள். ஒரு சிறிய கொடியை நட்டுவைத்து தங்கள் வேண்டுதலைக் கூறிச்செல்கிறார்கள். அது நிறைவேறியதும் மீண்டும் இங்கு வந்து பெரிய கொடியேற்றுகிறார்கள். இப்படி ஆயிரக்கணக்கான கொடிகள் இங்கு உள்ளன. திரிவேணி சங்கமத்தில் நீராடுபவர்கள் இங்கு வந்து வழிபட்டால்தான் பூரண பலன் கிட்டும் என்று சொல்கிறார்கள்.