பாரதப் போரின்போது, பீஷ்மர் சரமாரியாக அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் தைத்து, காயத்தை ஏற்படுத்தியபடி இருந்தன. எந்தச் சூழலிலும் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று பகவான் கிருஷ்ண பரமாத்மா செய்து கொடுத்த சத்தியம் அர்ஜூனனுக்கு நினைவுக்கு வந்தது. இதனால் ரொம்பவே கலவரமாகிப் போனான் அவன். இந்தச் சத்தியத்தைத் தெரிந்து வைத்திருந்த பீஷ்மர், மேலும் மேலும் அம்புகளை விட்டுக்கொண்டே இருந்தார். அத்தனை அம்புகளும் கிருஷ்ண பரமாத்மாவின் திருமுகத்தில் காயங்களை ஏற்படுத்தியவாறே இருந்தன. அவற்றைச் சிரித்த முகத்துடன் தாங்கிக் கொண்டார் கிருஷ்ணன். அதுமட்டுமா? அதே சிரித்த முகத்துடன், தமது திருமுகத்தில் உண்டான அத்தனைத் தழும்புகளுடன் இன்றைக்கும் நமக்குத் திருக்காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருவல்லிக்கேணியில்! அர்ஜூனன் எனும் உண்மையான பக்தனுக்காக, பாண்டவர்கள் என்கிற நல்லவர்களுக்காக எதையும் தாங்கிகொண்டான் கிருஷ்ணன் என்பதை உலகுக்குக் காட்டுகிற ஒப்பற்ற திருத்தலம் இது.