நரசிம்மாவதாரத்தை இஷ்ட தெய்வமாகக் கொண்டு உபாசனை செய்யலாம். இந்தியத் தத்துவஞானத்தில் சிறப்பிடம் கொண்ட ஆச்சாரியர்களில் ஒருவரான நிம்பார்க்கர். “ராமர் கிருஷ்ணர், நரசிம்மார் ஆகிய மூவரும் பூர்ண அவதாரங்கள் ஆவர் ” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, நரசிம்மமூர்த்தி கலாவதாரமோ, அம்சாவதாரமோ இல்லை. அவர் நாராயணன், ராமர், கிருஷ்ணர் போன்றே வழிபடுவதற்கு உரிய விஷ்ணுவின் ஒரு மூர்த்தமே ஆவார். நரசிம்மரை உபாசிக்கும் வைஷ்ணவ மடங்கள் இருக்கின்றன. அஹோபில மடத்தில் நரசிம்மமூர்த்தியே உபாசிக்கப்படுகிறார். ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதர் நரசிம்ம உபாசகரே ஆவார். பகவத்கீதைக்கு விளக்கவுரை இயற்றிய பெரும் சிந்தனையாளர்களில் ஒருவரும், மகானுமாகிய ஸ்ரீதர சுவாமிகள் நரசிம்ம உபாசகரே ஆவர். காசியில் மணிகர்ணிகா கட்டம் என்ற இடத்தில் கங்கைக் கரையில் ‘நரசிம்மசுவாமி மடம் ’ இருக்கிறது. இங்கிருந்து ஸ்ரீதர சுவாமிகள் நரசிம்மமூர்த்தியை வழிபட்டதாகச் சொல்கிறார்கள்.
வட ஆர்க்காடு மாவட்டத்தில் சோளசிங்கபுரம் (சோளிங்கர்) என்ற இடத்தில், நரசிம்ம மூர்த்திக்கென்றே ஒரு தனி கோயில் சிறப்பாக அமைந்துள்ளது. நாமக்கல்லிலும் நரசிம்மமூர்த்திக்கு கோயில் உள்ளது. சத்தியமங்கலத்தில் சுதர்சனநரசிம்மர் தரிசனம் தருகிறார். இது போன்று ஆராய்ந்தால் நரசிம்மமூர்த்திக்கு இன்னும் கூட திருத்தலங்கள் இருக்கும். தமிழில் ராமாயணம் பாடிய கம்பர், நரசிம்மமூர்த்தி உபாசகர் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பர் தாமாகக் கம்ப ராமாயணத்தை இயற்றவில்லை. அவர் ராமாயணம் இயற்றுவதற்கு நரசிம்மமூர்த்தி ஒவ்வோர் அடியாக எடுத்துக் கொடுக்க, கம்பர் ராமாயணம் இயற்றினார் என்று கூறப்படுகிறது. ஆதிசங்கரர் பரகாயப்பிரவேசம் செய்த நிகழ்ச்சியின் முடிவில், ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரம் ’ சொல்லி, நரசிம்மமூர்த்தியின் திருவருளை வேண்டிய பிரார்த்தனை செய்தார்.