பதிவு செய்த நாள்
13
மே
2016
05:05
ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்த அன்று இயன்ற அளவு தானங்களைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தைக்கு ஆயுளும் பலமும் பெருகும் என்கிறது சாத்திரம். மேலும் அவ்வமயம் பெற்ற தந்தை தங்கம், நிலம், பசு, ஆடை, குதிரை, தானியம், படுக்கை, இருக்கை, குடை, சந்தனம், விதை, பழம், நறுமணப்பொருள், வீடு முதலிய - தங்களால் இயன்ற சிறப்பு தானங்களை செய்திடவேண்டும் என்கிறது ஸ்ரீநைமித்திக பிரகாசம் எனும் நூல். ஒருவர் தானம் செய்வதால் சுவர்க்கம் முதலிய புண்ணிய உலகை அடைகிறார். இவ்வுலகிலும் மேலுலகிலும் புனிதராய்த் திகழ்வார். துயரம் விலகி சுகம் அடைவார். ஒருவர் செய்யவேண்டிய எச்செயலையும், தானம் முதலான அறங்களையும் குறித்த காலத்திலும் எண்ணிய உடனேயும் செய்திடவேண்டும். அவ்வாறு செய்யாதவரின் செல்வத்தை காலம் அழித்து விடும். எனவே தானதர்மங்களை காலம் கடத்தாது உடனே செய்திட வேண்டும். அனைவரையும் மகிழ்விப்பது தானங்களேயாதலால், இதுவே அனைத்துவிதமான விருப்பங்களையும் தரக்கூடியது என்கின்றன சிவாகமங்கள். எனவேதான் அனைத்து வேள்விகளின் முடிவிலும், கும்பாபிஷேகம் போன்றவற்றிலும் கோதானம் முதலான தான வகைளை விதித்து, ஜீவகாருண்ய பொதுநலச் செயலை மேற்கொள்ளும்படி வலியுறுத்துகின்றனர். மகன் பிறந்த தினத்தில் கொடுக்கப்படும் தானங்கள் பலமடங்காக - என்றும் குறைவற்றதாக இருக்கும் என்கிறது தர்மசாத்திரம்.
சாத்திரங்கள் விதித்தவற்றைப் பின்பற்றாமல் விலக்கியவற்றை கடைப்பிடிப்பதாலும்; மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் புலன்களை அடக்காததாலும் மனிதன் தாழ்வை அடைகிறான். ஆதலால் அவன் இவ்வுலகில் புனிதமடைவதற்காக பரிகாரச் செயல்களை - பிராயச்சித்த ஹோமங்களை தவறாமல் செய்ய வேண்டும். இதனால் அவனது ஆத்மாவும் உடலும் வாழ்க்கையும், புனிதமாகி அருள் பெறும். செய்யாதவர் நரகத்தை அடைந்து துன்புறுவர் என்று மகரிஷி யாக்ஞவல்கியர் உபதேசித்துள்ளார்.
அந்தணர் என்போர் அறுவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தன்மை பூண்டொழுக லான்
என்னும் வள்ளுவப் பெருந்தகை வாக்குக்கேற்ப, உலகில் யாவரும் மேலான பண்புகளைப் பெற முயலவேண்டும். அமைதி, நல்லொழுக்கம், அனைத்து உயிர்களிடமும் இனிமையாகப் பழகுதல், கோபப்படாமை, மென்மையான இனிய உள்ளம், இறையைப் பற்றி முடிவான - உறுதியான கொள்கை, தன்னைப் போன்றே பிறரிடத்திலும் சுகதுக்கங்களை சமமாகக் கருதுதல் போன்றயாவுமே அந்தணன் என்பவரின் இலக்கணமாகும். இவற்றை உரிய செயல்கள் செய்வதன்மூலம் எவரும் பெற இயலும். அறியாமல் ஏற்பட்டுவிட்ட குற்றங்களை உரிய பரிகாரக் கிரியைகளைச் செய்து குற்ற மற்றவர்களாகிப் பயன்பெறலாம். பல குற்றங்களுக்கு பிராயச்சித்த கிரியையாக, பிராஜாபத்திய விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கேட்காமல் தானாகக் கிடைக்கும் அரிசி உணவை மூன்றுநாள் காலையிலும், மூன்று நாள் மாலையிலும் மூன்று நாள் மதியத்திலும், மூன்று நாள் இரவிலும் உண்டு. மூன்று நாள் உண்ணாமல் இருப்பது பிராஜபத்திய விரதமாகும்.
உண்ணாவிரதம் பலவகை நோன்பிருப்பவரின் நாடு, காலம், வயது, உடல்நிலை, அறிவு, உடல் வலிமை போன்றவற்றை அனுசரித்தே செய்யவேண்டும். வேதாகம நெறிமுறைகளைப் பின்பற்றியாவரும் ஆண்டுதோறும் தமது பிறந்த நாளிலோ, திருமண நாளிலோ தானம் செய்ய வேண்டும். உத்தியோகப் பதவி ஏற்பு நாள், உகந்த புண்ணிய தினங்கள், தமது மகன்-மகளின் பிறந்தநாள் போன்றவற்றில் பூஜை, ஹோமம், தானம் ஆகியவற்றைச் செய்வது அறமாகும். நித்தியம், நைமித்திகம், காமியம் போன்ற அனைத்து கிரியைகளிலும் உன்னதமான கிரியை தானம் செய்வதே. தானத்திற்கு உரிய பொருளை கொடுப்பவர் மன மனமகிழ்வுடன் ஏற்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். தானம் செய்யும்பொழுது, எப்பொருளாயினும் அத்துடன் திருமகள் அம்சமான வெற்றிலைகளையும் பாக்கையும் சேர்த்துவைத்து உரிமையுள்ளோர் அல்லது தருமம் செய்யும் தம்பதியர் மந்திரத்தைக் கூறி அப்பொருளில் நீரை விட்டு, பின்பு ஞூந்த நீரை அங்கு பூமியில் விழுமாறு செய்தபின்பே அளித்திட வேண்டும். பலவற்றிற்குப் பரிகாரம் கூறும் ஸ்ரீமத் கருடபுராணத்தில் எட்டுவகையான பொருட்களின் தானங்கள் சிறப்புமிக்கவையாக -மகா தானங்கள் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.
எள்ளு, உலோகவகை, பொன், பருத்தி ஆடை, உப்பு, ஏழுவகை உணவு தானியங்கள், பூமி, பசு ஆகியவையே அவை. இவற்றில் ஏழு வகை தானியங்களில் எள்ளு இடம் பெறாது. நெல்வகை, யவம் (அரிய வகை நெல்) கோதுமை, பாசிப்பயிறு, உளுந்து, தினை, கடலை ஆகியவையே ஏழுவகை தானியங்கள்.
கன்யா தானம்: இத்தகைய பலவகை தாவரங்களில் கன்யா தானமும் (கன்னிப்பெண்ணை திருமணம் செய்துகொடுத்தல்) சிறப்பிக்கப்படுகிறது. ஸர்வதானோத்தமம் லக்ஷ்யே கன்யாதானம் த்விஜோத்தமா: என்ற ஆகம வசனப் படி, அனைத்து தானங்களிலும் சிறந்ததாக கன்யாதானம் போற்றிக் கூறப்படுகிறது. அவ்வாறு கன்யாதானம் செய்யும்போது சொல்லவேண்டிய ஆறு மந்திரங்களை ஆகமங்கள் கூறுகின்றன. அவற்றின் பொருளை இங்கு காண்போம்.
1. உலகைத் தாங்கி இயக்கிவரும் பஞ்சபூதங்களும், சகலதேவதைகளும், தேவர்கள், அக்னிபகவான், குருமூர்த்தி ஆகியோரும் சாட்சிகளாக முன்நிற்கும் இந்த திருமண மண்டபத்தில் எனது மகளான இந்த கன்னிகையை தானமாக அளிக்கிறேன்.
2. தந்தையாகிய நான் இப்புண்ணியச் செயலின் பயனாக பிரம்மலோகத்தை அடையவேண்டும் என்ற ஆவலால், மாசறு பொன்னோடும் பொன்னாபரணங்களோடும் கூடியுள்ள கன்னிகையான இவளை, வரனாக வந்துள்ள சிவ-விஷ்ணு ரூபமான உம்பொருட்டு இப்போது தானமாய் அளிக்கிறேன்.
3. என்னால் இயன்ற அளவில் அலங்கரிக்கப்பட்ட கவுரியான (மலையரசன் மகன் உமைபோன்றுள்ள) இக்கன்னிகை தானமாய் அளிக்கப்பட்டுள்ளாள். இவளோடு நன்கு வாழ்ந்திடுவீர்.
4. எனது அன்புமகளான கன்னியே! நீயே எனக்கு முன்புறத்திலும், பின்புறத்திலும் இருபக்கங்களிலுமாக- சுற்றிலுமாக காணப்படுவளாக -தேவியாக விளங்குகிறாய். ஆதலால் உன்னை வரனுக்கு தானமாய் அளிப்பதனால் நற்கதியான முக்தியை நான் பெறுவேன்.
5. எனது வம்சத்தில் நற்குலத்தில் தோன்றிய என் மகளான இக்கன்னி இன்றுவரை காப்பாற்றப்பட்டாள். மகன், பேரன்களை உமக்கு அளிக்கக்கூடிய சக்தியாக இன்று என்னால் உம்பொருட்டு அளிக்கப்பட்டாள். ஏற்று மகிழந்து வாழ்ந்திடுக.
6. மூவுலகநாதனும், அனைத்து உயிர்களிடமும், தயை கொண்டுள்ள கருணைக் கடலும், தேவர்களின் தலைவனுமான இறைவன் இந்த எனது கன்யாதானத்தால் மகிழ்ந்தவராகி, எனக்கு மனஅமைதியைத் தந்தருள வேண்டும்.
இவ்விதம் சாட்சிகளின் முன்பு தமது உரிமை, நோக்கம், பயன், விருப்பம் ஆகியவற்றைக் கூறி அளிக்கப்படுவதால் கன்யா தானம் சிறந்து விளங்குகிறது.
அன்னதானம்: அனைத்திலும் அன்னதானம் ஒப்பற்றதாக விளங்குகிறது. அன்னதானம் செய்யும்போது சொல்லவேண்டிய மூன்று மந்திரங்கள் உள்ளன. அவற்றின் பொருளை இங்கு காண்போம்.
1. அன்னமே பிரம்மதேவன்; அன்னமே மகா விஷ்ணு. அன்னத்தினாலேயே உயிரினங்கள்யாவும் தோன்றுகின்றன; வளர்கின்றன இதனால் அன்னமே கடவுளாகிறது.
2. அறுசுவையோடு கூடியதும், தேன், நெய், தயிர், பொரியல், காய்கறிக்கூட்டு, பருப்பு, பலகாரங்களுடன் கூடியதும், சிவனுருவாய் உள்ள சம்பா ரக நெல்லின் பச்சரிசிச் சோற்றோடுகூடிய சமைத்த உணவானது. அனைவருக்கும் தினமும் ஜீவாதாரமாக விளங்குகிறது.
3. உடலில் உயிர்சத்தை அளித்து, மகிழ்ச்சியையும் உடல் வளத்தையும் வலிமையையும் கொடுத்துக் காத்திடும் கடவுளாய் மகிமை பெற்றுள்ளது. இத்தகைய அன்னத்தை தானம் அளிப்பதனால் இறைவன் எனக்கு ஆரோக்கிய வாழ்வுடன் அமைதியைத் தந்தருளட்டும்.
வேதம், ஆகமம், புராணம் யாவும் உணவே கடவுள் என்கின்றன. எனவே உணவை நிந்தித்தல் கூடாது. ஏழை -எளிய மக்களுக்கு பூஜை முடிவில் அன்னதானம் செய்யப்படவேண்டும். அன்னமே அனைத்திற்கும் அடிப்படை என்று கூறி, அன்னம் ச பிரம்மா போக்தா ச பிரம்மா என்கிறது வேதம். ஆதலால் யாகபூஜை, பிராய்ச்சித்த சாந்தி கிரியைகள் யாவிலும் ஒரு முக்கிய அங்கமாக அன்ன போஜனம் கூறப்பட்டுள்ளது. இந்த தானத்தை யாசிப்பவருக்கு மட்டுமே -பசியுள்ளோருக்கே அளிக்கவேண்டும். அற வாழ்வே இறைவழியில் சேர்க்குமென்பதால், அதில் உயர்ந்ததான தானங்களை உரியவருக்கு உள்ளன்போடு செய்தால் இறையருள் நிறைந்து பெருகும்.