கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பட்டாபிஷேக ராமர் சித்திரை பெருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் ஹரே ராமா கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது. விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. சீதா சமேத பட்டாபிஷேக ராமர், லட்சுமணர், அனுமன் தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தேரை ஹரே ராமா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயிலை சுற்றி நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம்வந்த பின் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டத்தில் கனிகள் வீசும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிழைவு நிகழ்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு தீர்த்தாவாரி காண்பதற்காக ஆதிஜெகந்நாதப்பெருமாள், பட்டாபிஷேக ராமர் சேதுக்கரைக்கு எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து கருட, ஆஞ்சனேய வாகனத்தில் ராமர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.