பதிவு செய்த நாள்
31
மே
2016
03:05
சிறிய திருவடி என அழைக்கப்படும் ஆஞ்சநேயரின் பிரபாவங்களை அறிந்த அளவு, பெரிய திருவடியாகிய கருடனின் பெருங்கருணையை முழுவதும் பல பேர் உணர்ந்ததில்லை. அவரின் பிரபாவங்கள் “நான்மறைகளையும் தான் வசிக்கும் கூடாகக் கொண்டு அதன் மேல் அமர்ந்திருப்பவரும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து திருமால் புறப்படுகையில் அவரைத் தன் தோள் மீது தாங்கிப் புறப்படுபவரும், தன் பக்தர்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களை அடக்கவல்ல வீர்யமிகுத்தோள் வலிமைக் கொண்டவரும்....”என்று வேதாந்த தேசிகர் சுவாமிகள் தனது ‘கருட தண்டகம்’ ஸ்தோத்திர மாலையில் துதிப்பது போல் நாமும் கருட சேவையின் போது தெய்வத் தம்பதியினரைத் தன் மேல் தாங்கி அழகாகக் காட்சியளிக்கும் பெரிய திருவடி’யை அவரது அவதாரத்திருநாளன்று போற்றித் துகிக்கலாம். அவரைப் பற்றிய அரிய சில விஷயங்களை மகாபாரதம் ஆதிபர்வம் கூறுகிறது.
நான்முகன், உலகில் ஜீவன்களைப் படைப்பதற்கு உதவிடதக்ஷன் முதலிய பத்துப் பிரஜாபதிகளைப் படைக்கிறார். அவர்களுள் ஒருவர்தான் காஸ்யபர் ரிஷி. இவரே அதிதி, கத்ரு, வினதை எனும் தக்ஷனின் பதின்மூன்று புத்திரிகளை மணந்து கொண்டவர். அவரது பர்ணசாலை அன்றைய தினம் திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. காஸ்யபர் புத்திர காமேஷ்டி யாகம் செய்ய விரும்பிய போது இந்திரன் உள்ளிட்ட தேவாதி தேவர்களும் தங்களுக்குரிய பங்கைச் செய்தனர். அப்பொழுதுதான் அந்த அரிய, அதிசயக் காட்சியை இந்திரன் காண நேர்ந்தது. மழுங்க, மழித்த தலையுடன் கட்டை விரல் அளவு உயரமுடைய வாலகில்யர்கள் எனும் முனிவர்கள் மிகச் சிரமப்பட்டு ஒரு கிம்சுகா மரத்துக் குச்சியைத் தூக்கி வரும்போது நடு வழியில் இருந்த பசுக்களின் குளம்படித் தடத்தில் தேங்கியிருந்த நீரைத் தாண்ட முடியாமல் தவித்தனர்.
“தவ சிரேஷ்டர்களே! காற்றையும் சூரியக் கதிர்களையுமே உணவாக ஏற்கும் தங்களுக்கு இந்தப் பிரயாசை தேவைதானா? இந்தச் சின்னஞ்சிறு தடத்தையே தாண்ட முடியவில்லையே?!” என்று பரிகசித்தான் இந்திரன். இதனால் கோபமுற்ற வாலகில்யர்கள், “தேவேந்திரா! பதவியின் இறுமாப்பு, மமதையால் எங்களை இகழ்கிறாயா? பதவியும் போக வாழ்வும் உன்னிடமிருந்து பறிக்கப்பட்டால் என்ன செய்வாய்? இன்னொரு இந்திரனை உருவாக்க வேள்வி செய்து, அவன் உன்னை வீழ்த்துமாறு செய்கிறோம்.... எனக் கூற, இந்திரனுக்கு தான் செய்த தவறு உறைத்தது. பிரமனிடம் சரணடைய அவரோ முனிவர்களின் சபதம் நிச்சயம் நிறைவேறும் என்றாலும் அதை வேறுவிதத்தில் முடித்து வைக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார். அதன்படி, பிரமனின் தலையீட்டால், வாலகில்யர்கள் தாங்கள் உருவாக்க இருக்கும், இந்திரன் வலிமைமிக்கவனாகப் பட்சிகளின் ராஜனாக விளங்க, காஸ்யபர் மேற்கொண்ட வேள்வியின் பலனாக அவருக்குப் புத்திரனாகப் பிறக்குமாறு செய்தனர். அதன்படி, கத்ருவுக்கு நாகங்கள் பிறந்தன. தனது ஒரு கரு முட்டையை அவசரப்பட்டு கால கெடுவுக்கு முன்பே ஆர்வமிகுதியால் வினதை உடைத்து விட, பாதி வளர்ந்த உருவுடன் வெளிப்பட்ட மகன் ஆக்ரோஷத்துடன், “அன்னையே! என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிய நீ அதற்குரிய விளைவைச் சந்தித்தே தீர வேண்டும். சில காலம் நீ அடிமைத் தளையில் பிணைந்திருப்பாயாக! ” என்று தாயென்றும் பாராமல் சாபமிட்டு விட்டு சூரியனின் சாரதியாக (அருணன்) ஆகிவிட்டான்.
உரிய நேரத்தில் இரண்டாவது முட்டை பொரிந்து அதிலிருந்து வெளிப்பட்டான் வாலகில்யர்களின் அந்த மாற்று இந்திரன், பலசாலி பட்சிராஜனாகவும், பெரியத் திருவடியாகவும் பரிணமிக்கப்போகும் வைனதேயன்! பெரிய அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தாயாரை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க அயராது பல முயற்சிகளை மேற்கொண்டான். ஒரு கட்டத்தில் கத்ரு, தேவேந்திரனிடம் பாதுகாப்பாக இருக்கும் அமிர்த கலசத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் வினதையை விடுவிப்பதாகக் கூற, அதற்கும் அடிபணிந்தான். வெகு தொலைவு பறந்து சென்று, எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியுடன் திரும்ப உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற, அன்னையின் அறிவுரைப்படி, காடு, மலைகளில் வசிக்கும் நிஷாதர்களை உண்கிறான். அப்படியும் பசியாறாமல் இருக்கவும், தந்தை காஸ்யபரை அணுகுகிறான்.
“குழந்தாய், வைனதேயா! உன் அகோரப் பசியைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறது. இங்கிருந்து சற்றுத் தொலைவில் ஏரி ஒன்று இருக்கிறது. அதன் கரையில் பெரிய யானை ஒன்றும், மற்றொரு ராட்சஸ ஆமையும் தங்களுக்குள் காலம் காலமாய் முடிவில்லாமல், அர்த்தமின்றிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. எதற்கும் பிரயோஜனமில்லாத அவைகளைப் பிடித்து உண்பாயாக!” என்று அறிவுறுத்துகிறார். (துறவி என்ற சொல்லுக்குச் சற்றும் தகுதியற்ற கோபமே வடிவாக விளங்கும் விபாவசுவும், பேராசை, பொறாமையின் மொத்த உருவாக விளங்கும் அவரது இளவல் சுப்ரதீகாவும் துறவறம் பூண்டாலும் மண்ணாசை அவர்களை விட்டு விடவில்லை. எப்போதும் சொத்துக்காக தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். விபாவசு, தன் தம்பி மறுபிறவியில் கட்டுக் கடங்காத ஒரு அட்டகாச யானையாகப் பிறக்கும் படி சாபமிட்டான். பேராசையால் உந்தப்பட்ட சுப்ரதீகா பதிலுக்குத் தன்தமையன் ஒரு ராட்சஸ ஆமையாக நீர்நிலைகளில் உழலுமாறு எதிர் சாபமிட்டான். அடுத்த பிறவியிலும் இவர்களின் சண்டை தொடர்ந்தது. கோபமும் பேராசையும் ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழித்துச் சீரழிக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணம்.)
ஏரிக்கரையில் ஆக்ரோஷமாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு மிருகங்களையும் வைனதேயன் சீறிப்பாய்ந்து பிடித்துக் கொண்டான். கூரிய நகங்களை உடைய கால்களால் இறுகப் பற்றிக் கொண்டு அருகிலுள்ள வனத்து ஆலமரக் கிளையொன்றில் வந்து அமர்ந்தான். சுற்றிப் பார்த்தவன் பார்வையில், கிளையின் மறுமுனையில் வாலகில்யர் முனிவர்கள் தலைகீழாய்த் தொங்கியவாறு தவமியற்றிக் கொண்டிருப்பது பட்டது. அந்த நேரம், அவர்கள் அனைவரின் பாரமும் தாங்காமல் மரக்கிளை முறியத் தொடங்கியது. முனிவர்களுக்கு ஒரு தீங்கும் நேராமல் காக்க, அக்கிளையைத் தனது அலகால் இறுகக் கல்விக் கொண்டான். இரு கரங்களிலும் யானை, ஆமையை நன்றாகப் பற்றிக் கொண்டு கந்தமாதன் பர்வதத்தை அடைந்து, அங்கு முனிவர்களைப் பத்திரமாக இறக்கி விட்டான். ஆச்சரியமடைந்த முனிவர்கள் வைனதேயனின் பராக்கிமத்தைப் பாராட்டி,, “வைனதேயா! உன் பிறப்புக்குக் காரணமானவர்கள் நாங்களே. இந்திரப் பதவிக்கு ஈடான பட்சி ராஜன் பதவியை உனக்கு அளித்தோம். உனது வலிமை நாங்கள் எதிர்பார்த்தது போலவே இருந்தாலும், நேரில் காண மேலும் வியக்க வைக்கிறது. அதனால் இனி நீ கருடன் (அதிக பளுவை அநாயாசமாகத் தூக்கிச் செல்பவன்) என அழைக்கப்படுவாய், உன் அனைத்து இடைவிடா முயற்சிகளிலும் வெற்றியுண்டாகட்டும்!” என ஆசி வழங்கினர்.
அவர்களை வணங்கி ஆசி பெற்ற பின், கருடன் அந்த யானை, ஆமையைப் புசித்து, தன் இலக்கை நோக்கிப் பறந்தான். வாலகில்யர்கள் செய்த சபதத்தின்படி கருடன் தேவர்களையும் அவர்களது தலைவன் இந்திரனையும் வென்று, அமுத கலசத்தையும் கவர்ந்து வந்து தன் பெரியன்னை கத்ருவிடம் அளித்தான். அவள் அதைப் பவித்திரமான தர்ப்பைப் புல் மேல் வைக்கிறாள். தன் சகோதரி வினதையை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தாள். “வைனதேயா! இன்றிலிருந்து நீ சுபர்ணன் (அழகிய இறகுகளாலான சிறகை உடையவன்) என்று அறியப்படுவாய்!” என வாழ்த்துகிறாள். அருணனின் சாபமும் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் கருடனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திரன், கத்ருவும், நாகங்களும், அயர்ந்திருந்த சமயம் அமுதக் கலசத்தை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான். பின்பு அங்கு வந்த நாகங்கள் கீழே அமுதத் துளிகள் சிந்தியிருக்குமோ எனத் தர்ப்பைப் புல்லை நக்கிப் பார்க்க, அவற்றின் நாக்கு அன்றையிலிருந்து இருபாதியாகப் பிளவுண்டு போனது. கருடனைப் பற்றிய மேற்கண்ட சில விவரங்கள் ஒரு சிறந்தப் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதைக் காண நேர்ந்தபோது அந்தச் சிற்பியின் ரசனையையும். கலை வண்ணத்தையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவ்வளவுத் தத்ரூபமாக நம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் சிற்பங்களின் களஞ்சியமாக விளங்கும் அந்த க்ஷேத்திரம்.
தென்திசை பத்ரி என்றும், 108 திவ்ய தேசங்களுள் வாமன க்ஷேத்திரம் எனப் புகழப்படுவதும், ராமாயணக் கால நிகழ்வுகள் சில நடந்தேறிய மகேந்திரகிரி அடிவாரத்தில் அமைந்திருப்பதும், அரையர் சேவை, கைசிகப் புராணத்துக்குப் புகழ் பெற்றதும், நின்ற கிடந்த, அமர்ந்த மற்றும் பாற்கடல், நம்பி, மலைமேல் நம்பி என ஐந்து நம்பி நாராயணர் சன்னதிகள் கொண்டதும், திருமங்கையாழ்வார் மோட்சம் அடைந்த தலமும், சுந்தர பரிபூரணம் என்றழைக்கப்டும் மூலவர் வைணவ நம்பிராயர் ராமானுஜரின் சீடராய் இருந்து வைணவ சம்பிரதாயத்தைக் கற்றறிந்ததாகச் சொல்லப்படும். க்ஷேத்திரமும், வைகுண்டம், இங்கிருந்து ‘கூப்பிடுதூரம் ’ தான் என்று அறியப்படுவதுமான ‘திருக்குறுங்குடி திவ்ய தேசமே அது.
திருநெல்வேலி டவுனிலிருந்து தெற்கே சுமார் 47 கி.மீ. தொலைவில் நாங்குநேரி தாண்டி அமைந்துள்ளது. வள்ளியூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ வாகன வசதிகள் உண்டு.