பதிவு செய்த நாள்
30
மே
2016
02:05
மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரத்தில் வராக அவதாரம் மூன்றாவது அவதாரம். பிரம்மா உலகைப் படைத்து, பிராணிகளைப் படைக்க ஆரம்பித்தபோது இரண்யாட்சகன் என்னும் அசுரன், பூமியைச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் போய் ஒளித்து வைத்து விட்டான். அப்போது மகாவிஷ்ணு வராக வடிவில் வந்து கடலுக்குள் சென்று இரண்யாட்சகனைக் கொன்று, தன் கோரைப் பற்களால் பூமியைத் தூக்கிக் கொண்டு வந்து ஸ்தாபித்ததாக வராக அவதாரத்தின் கதை கூறுகிறது. பத்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் மத்திய பகுதியில் ஆட்சி செய்த சாந்தாலா ராஜ வம்ச அரசர்கள், வராகத்திலிருந்தே நாம் இன்று வணங்கும் எல்லா தெய்வங்களும் உண்டாயினர் என்று நம்பினார்கள். கடலில் தோன்றிய முதல் மானுட மூல உயிர் முதுகெலும்பற்ற மீன். அதுவே மச்சாவதாரம். அடுத்தது ஆமை, கூர்மாவதாரம். அடுத்ததாக எழுந்ததுதான் பன்றி எனும் வராகம். இதுவே மூன்றாவதாக ஏற்பட்ட மாறுதல்.
வராகமே இரண்டு கால்களில் எழுந்து நின்று மானுடமாகியது. ஆகவே இதுவே மனிதனின் மூல புருஷன் என்று சாந்தாலா அரசர்கள் தீர்மானித்தார்கள். பிரசித்தி பெற்ற கஜுராஹோ கோயிலில் மனிதகுலம் மன்மதக் கலையினாலேயே உலகில் பல்கிப் பெருகியது என்பதைச் சொல்லி, மனித குலம் தழைக்க இனப்பெருக்கம் அவசியம் என்பதை உணர்த்தவே அவர்கள் கஜுராஹோ கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். அதில் வாரகமே மூல புருஷன் என்ற உண்மையையும் உணர்த்திட, சிலா ரூபமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் பொருட்டே உத்தரபிரதேசத்தில் உள்ள உதயகிரியில் குப்தர் காலத்தில் வராகருக்கு பிரம்மாண்டமான ஒரு சிற்பம் எழுப்பி இருக்கிறார்கள். மத்திய இந்தியாவில் கஜுராஹோ அருகில் காந்தாய மகாதேவர் கோயில் இருக்கிறது. அதன் முன்புறம் ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழைமையான கருங்கல்லால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வராகர் சிலை நிற்கிறது. சில படிகள் ஏறினதுமே, ஒரு பெரிய மேடையிலே அந்த வராகம் இருக்கிறது. அந்தப் பெரிய சிலையில் பல அதிசயங்கள் இருக்கின்றன.
சாந்தாலா வம்சத்து அரசர்களின் ஆட்சியின் தொடக்கக் காலத்தில் அமைக்கப்பட்டதுதான் அந்தக் கோயில். அங்கு அமைந்துள்ள பெரிய வராகத்தின் சிலை ஆறடி உயரமும், ஒன்பதடி நீளமும் கொண்டிருக்கிறது. தஞ்சை மாநகரில் பெருவுடையார் சன்னதியைப் பார்த்துக்கொண்டு எப்படி பெரிய நந்தி இருக்கிறதோ, அதே போன்று இங்கு வராகமும் மகாதேவர் சன்னதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கம்பீரமாக நிற்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருங்கல்லால் ஆன இந்த வராகத்தின் உடலில் சிறிதும் பிசிறில்லாமல் வரி வரியாகக் கோடுகள் பிரித்து, அவற்றினுள் 764 இந்துக் கடவுள்களின் உருவங்களை மிகவும் நுணுக்கமாக கலையம்சத்தோடு பொறித்திருக்கிறார்கள். இந்த பிரம்மாண்டமான வராகர் சிலை தலையில் இருந்து வால் வரையில் ஓர் ஒப்பற்ற அழகும், ஒழுங்குமான முறையில் ஒரே சீராகச் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் காணும்போது உயிர்கள் அனைத்தும் இதில் அடக்கம் என்கிற மாதிரி இருக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன், கங்கை, யமுனை, சரஸ்வதி என்று எல்லா புராணப் பாத்திரங்களும் இந்த ஒரு வராகத்தின் உடலில் எங்கும் நிறைந்து கிடக்கின்றன. வராகத்தின் அடிவயிற்றிலேகூட பற்பல உருவங்களை சிற்பி எழிலுற வடித்திருக்கிறான்.
அந்த வராகம் ஒரு சிறு மண்டபத்தில் நிற்கிறது. அது தனது இரண்டு இடது கால்களையும் முன்னால் நடக்கிற பாவனையில் வைத்துக்கொண்டிருக்கிறது. கால்களும், உடலும் பளபளவென்று பளிங்கு போல் பாலீஷ் செய்யப்பட்டிருக்கின்றன. வராகம் பூமிக்கு வந்ததை உணர்த்த அது நிற்கும் மேடையிலேயே பிருத்வியின் வடிவத்தையும் சிற்பி செதுக்கியிருக்கிறான். ஏராளமான சிலாரூபங்களுடன் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான வராகர் சிலையைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அத்தனை தெய்வீக அம்சமும் கலையம்சமும் கொண்டு விளங்குகிறது. இந்த அற்புதமான வராகர் சிலை கி.பி. 900-925-ல் இப்பகுதியை ஆண்டு சாந்தாலா மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.