பதிவு செய்த நாள்
01
ஜூன்
2016
11:06
திருப்பூர்: ""கடவுளின் ஞானம், நமக்குள் வரும்போது, நமது வாழ்க்கை அழகாகிறது. நமது சொல், செயலில் கடவுளே நிறைந்திருக்கிறார், என, ஆன்மிக சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசினார். ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் திருப்பூர் மாவட்டம் சார்பில், ஸ்ரீ சத்ய சாயி பாபாவின், "ஸ்ரீ சத்ய சாயி ஸப்தாஹ தேவாமிர்தம், ஆன்மிக சொற்பொழிவு, நல்லூர் ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலியில், கடந்த, 28ல் துவங்கியது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், "சரணாகதி தத்துவம் என்ற தலைப்பில், சென்னையை சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் வாசுதேவன் பேசியதாவது: சரணாகதி என்பது மிக சுலபமானது; ஆனால், அதை யாரும் செய்ய முன்வருவதில்லை. "எனக்கு ஒன்றும் தெரியாது; மனம், வாக்கு, செயலால் யாருக்கும் நான், தீங்கு செய்யக்கூடாது. அதேபோல் மற்றவர்களும், மனம், வாக்கு, செயலால் எனக்கு தீங்கு செய்யக்கூடாது, என, கடவுளிடம் சரணாகதி அடைய வேண்டும். அப்படி செய்தால், கடவுள் நம்மை வழி நடத்துவார். நம் இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
கடவுள் தரும் போதனைகளை, வாழ்க்கையில் பின்பற்றும் போது, அது நமக்கு சொந்தமாகிறது. போதனைகளை பயன்படுத்த தவறும்போது, கடவுளின் அருள் நமக்கு கிடைப்பதில்லை. கடவுள், செல்வம் நிறைந்தவர்; அவரை நம்ப வேண்டும். நமது அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் கடவுள் என்பதை, நாம் உணர வேண்டும். கடவுள் மனதுக்குள் இருப்பதால் தான், மனிதர்கள் அழகாக தெரிகின்றனர். கடவுள், நல்லது கெட்டதை ஆராய்ந்து, வாழ்க்கையை நடத்த, நமக்கு வழிகாட்டுகிறார். கடவுளின் ஞானம், நமக்குள் வரும்போது நமது வாழ்க்கை அழகாகிறது. நமது சொல், செயலில் கடவுளே நிறைந்திருக்கிறார். மனிதர்களின் வாழ்க்கை, கடவுளால் உருவாக்கப்பட்டது. பஞ்சபூதங்களை அடக்கி ஆள்பவர், கடவுளே. அவ்வகையில், கடவுளின் குணாதிசயங்களை கொண்டவராக, சத்ய சாயிபாபா நம் வாழ்வை சிறப்பாக்குகிறார்.இவ்வாறு, அவர் பேசினார். திருப்பூர் மாவட்ட, ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். வரும், 3ம் தேதி வரை, தினமும் ஒரு தலைப்பில், "ஸ்ரீ சத்ய சாயி ஸப்தாஹ தேவாமிர்தம், சொற்பொழிவு நடைபெறுகிறது.