பதிவு செய்த நாள்
04
ஜூன்
2016
12:06
திருத்தணி: முருகன் கோவிலுக்கு சொந்தமான முடி காணிக்கை மண்டபத்தில், மொட்டை அடிக்க, 40 ரூபாயும், குளிப்பதற்கு, 20 ரூபாயும் என, பட்டியலிட்டு ஊழியர்கள் கட்டாய வசூலிப்பதால், பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு வசதியாக பேருந்து நிலையம் அருகே சன்னதி தெரு, திருக்குளம், மலைப்படியில் மற்றும் மலைக்கோவில் என, நான்கு இடங்களில் தேவஸ்தானம் சார்பில் முடி காணிக்கை மண்டபம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கேயே குளிப்பதற்கு இலவச அறைகளும் உள்ளன. அங்கு, மொட்டைக்கு, 10 ரூபாய் வீதம் கோவில் நிர்வாகம் வசூலிக்கிறது. ஆனால், ஊழியர்கள் கூடுதல் தொகை நிர்வாகத்திற்கு தெரியாமல் வசூலிக்கின்றனர். உதாரணமாக, சன்னதி தெருவில் உள்ள நாகவேடு முடி காணிக்கை மண்டபத்தில், பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் விற்கப்படும்,
10 ரூபாய் டிக்கெட் பெற்றுக் கொண்டாலும், அங்குள்ள ஊழியர்கள், ஒரு மொட்டைக்கு, 40 ரூபாய் கொடுத்தால் தான் மொட்டை அடிப்போம் என, அடாவடியாக வசூல் செய்கின்றனர். அதே போல், அங்குள்ள எட்டு இலவச குளியல் அறைகளில், பக்தர்கள் குளிப்பதற்கு, ஒருவருக்கு, 20 ரூபாய் கொடுத்தால் மட்டுமே குளிக்க அனுமதிக்கின்றனர். நாங்கள், குடும்பத்துடன் திருப்பதி, திருத்தணி ஆகிய கோவிலுக்கு அடிக்கடி வந்து மொட்டை அடித்து பிரார்த்தனை நிறைவேற்றுவோம். திருப்பதியில் மொட்டைக்கும், குளிப்பதற்கும் ஊழியர்கள் அடாவடி வசூல் செய்வதில்லை. ஆனால், சமீப காலமாக திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். எங்களுக்கு மனவேதனை அளிக்கிறது. கோவில்நிர்வாகம் கண்டும், காணாமல் உள்ளது ஆச்சரியமாக உள்ளது.
பாரதி நாகராஜ், காஞ்சிபுரம் முடி காணிக்கை மண்டபங்களில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, பலமுறை அறிவுறுத்தி வருகிறோம். அதே போல் குளியல் மற்றும் கழிப்பறைகளிலும் பணம் வாங்கக் கூடாது என ஊழியர்களுக்கு எச்சரித்து வருகிறோம். கட்டாய வசூலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.